×

‘மகா’ புயல் எச்சரிக்கையால் மீண்டும் கடலுக்கு செல்ல முடியவில்லை குஜராத்தில் பரிதவிக்கும் 600 தமிழக மீனவர்கள்

நாகர்கோவில்: ‘மகா’ புயல் எச்சரிக்கை காரணமாக குஜராத்தில் உணவு, தண்ணீரின்றி குமரி மாவட்ட மீனவர்கள் தவித்து வருவதாக வாட்ஸ்அப் வீடியோ ஒன்றை மீனவர்கள் வெளியிட்டுள்ளனர்.  குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் புயல் அறிவிப்பு காரணமாக அருகே உள்ள துறைமுகங்களில் கரை சேரஅறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதன்மூலம் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகுகள் துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன. கியார் புயல் எச்சரிக்கை காரணமாக குஜராத் மீன்பிடி துறைமுகத்தில் குமரியை சேர்ந்த 600 மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.  இவர்களில் மீனவர் ஒருவர் வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர் வேதனையுடன் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க வந்தவர்கள் குஜராத் வீரவல் துறைமுக பகுதியில் கரை சேர்ந்துள்ளோம். சாப்பாடு செலவுக்கு கஷ்டப்படுகிறோம். உணவு தண்ணீருக்கு வழியில்லை. ஊருக்கு திரும்பவும் வழியில்லை. எங்களை மத்திய அரசு, மாநில அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் உட்பட 600 பேர் இங்கு உள்ளோம். 12 நாட்களாக நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று கூறியுள்ளார். அரபிக்கடலில் ‘கியார்’ புயல் எச்சரிக்கையின்போது கரையொதுங்கிய இவர்கள் தற்போது ‘மகா’ புயல் திசை மாறி குஜராத் நோக்கி நகர்வதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : fishermen ,Tamil ,Gujarat ,sea ,storm , 600 fishermen, Gujarat
× RELATED இலங்கை சிறையிலிருந்து...