புதுடெல்லி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநில அரசு பிறப்பித்த அரசாணையால் ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே இருக்கும் நிர்வாக அலுவலகத்திற்கு செல்ல மட்டும் அனுமதி வழங்கி, உற்பத்திக்கு மட்டும் தடை விதித்து உத்தரவிட்டது. ஆய்வு செய்ய உயர்குழுவை நியமித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு நீதிபதி தருண் அகர்வால் குழு ஆலையை ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடர்பான முகாந்திரம் மற்றும் தகுதிப்பாட்டை பார்த்து தீர்ப்பாயம் வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
எனினும், தமிழக அரசு தரப்பில் செப்டம்பர் 14ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முழு ஆய்வு நடத்திய பின்னர் தான் ஆலைக்கு சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் பிறப்பித்த முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிண்டன் நாரிமண் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் சேம்பர் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்ப்பாயம் வழங்கிய முந்தைய உத்தரவிற்கு கண்டிப்பாக எந்தவித தடையும் விதிக்க முடியாது என தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சீலிடப்பட்ட 48 கவரில் அறிக்கை தாக்கல்
ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி முதல் ஆலையை குழு முழுவதுமாக ஆய்வு நடத்தியது. இதில் ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்தனர். எனினும், ஆய்வுப் பணி முழுமை அடையாததால் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மூவர் குழு கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து நவம்பர் 30ம் தேதி வரை, அதாவது கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் வழங்கியது தீர்ப்பாயம். இதை தொடர்ந்து, மூவர் சிறப்பு குழு நேற்று ஆய்வறிக்கையை 48 சீலிடப்பட்ட கவரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில்,”ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவைக்கு பாதிப்பு உள்ளதா?, போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் 13 பேர் உயிரிழந்தது, ஆலை தொடர்பாக தமிழக அரசு கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தானா?’’ ஆகியவை தொடர்பான அனைத்து விவரங்களும் ஆய்வறிக்கையில் உள்ளதாக தெரிகிறது. இதனை விரைவில் பரிசீலனை செய்யும் தீர்ப்பாயம், டிச.10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது இடைக்கால உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
