×

மகாராஷ்டிராவில் ரூ.19,142 கோடியில் 6 வழித்தடச் சாலை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ரூ.19,142 கோடி செலவில் நாசிக்-சோலாப்பூர்-அக்கல்கோட் வரை 6 வழித்தட பசுமைச் சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மகாராஷ்டிராவில் ரூ.19,142 கோடி செலவில் நாசிக்-சோலாப்பூர்-அக்கல்கோட் வரை 374 கிமீ தொலைவுக்கு 6 வழித்தட பசுமைச் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்ட கொள்கையின் கீழ் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இத்திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த பசுமை வழித்தடம் நாசிக்கில் இருந்து அக்கல்கோட்டை வரை வதவான் துறைமுக சந்திப்புக்கு அருகில் டெல்லி-மும்பை விரைவுச் சாலையை இணைக்கும்.

நாசிக்கில் ஆக்ரா-மும்பை வழித்தடத்தையும் இணைக்கும். இதுமட்டுமின்றி நாசிக், அகில்யநகர், சோலாப்பூர் போன்ற முக்கிய நகரங்களை கர்னூலுடன் இணைக்கும். இதன் மூலம் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை நேரடி இணைப்பை வழங்கும். ஏற்கனவே சென்னை துறைமுக முனையத்தில் இருந்து திருவள்ளூர், ரேணிகுண்டா, கடப்பா மற்றும் கர்னூல் வழியாக மகாராஷ்டிரா எல்லையான ஹசாப்பூர் வரையிலும் 700 கிமீ நீள 4 வழித்தட சாலை கட்டுமானத்தில் உள்ளது.

இந்த 6 வழிச்சாலை திட்டம் மூலம் இப்பகுதியில் 31 மணி நேர பயணம் 17 மணி நேரமாக குறையும். 201 கிமீ குறைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு பாதுகாப்பான, வேகமான மற்றும் தடையற்ற இணைப்பை வழங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.1,526.21 கோடியில் ஒடிசாவில் என்எச்-326 தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யவும், தற்போதைய தேவைக்கு ஏற்ப வலுவாக்கம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

* வோடபோன் ஏஜிஆர் தொகை வழங்க 5 ஆண்டு அவகாசம்
தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.87,695 கோடி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுகைத் தொகையை செலுத்த 5 ஆண்டு வட்டியில்லா அவகாசம் வழங்கி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தொகையை 2031-32ம் நிதியாண்டில் செலுத்த தொடங்கி 2040-41ல் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெரும் நஷ்டத்தில் சிக்கிய வோடபோன் நிறுவனத்தை மீட்க அதன் 49% பங்குகளுடன் ஒன்றிய அரசு மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Maharashtra ,Union Cabinet ,New Delhi ,Nashik-Solapur-Akalkot ,Affairs ,Modi ,Delhi ,
× RELATED ஒடிசாவில் கூடுதல் தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம் சிக்கியது