புதுடெல்லி: வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் நிமெசுலைட் மாத்திரை, மருந்தை பயன்படுத்துவதற்கு சுகாதார துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘100மி.கி.க்கு மேல் உள்ள நிமெசுலைட்டின் அனைத்து வகையான மாத்திரை, மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிமெசுலைட்டின் பயன்பாடு மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்று மருந்துகள் கிடைக்கின்றன. பொதுநலன் கருதி, மனித பயன்பாட்டிற்காக நாட்டில் இந்த மருந்தின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தடை செய்வது அவசியமானது மற்றும் பொருத்தமானதாக கருதப்படுகின்றது.
எனவே 1940ம் ஆண்டு மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் பிரிவு 26ஏ வழங்கிய அதிகாரங்களை பயன்படுத்தி, மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த மருந்தின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தடை விதிக்கப்படுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
