- பில் லார்ட்
- கிறிஸ்டோபர்
- ஆண்டி வெயர்
- ட்ரூ கோடார்ட்
- ரியான் கோஸ்லிங்
- வீய்ர்
- சாண்ட்ரா ஹுல்லர்
- ஜேம்ஸ் ஆர்டிஸ்
- லியானல் பாய்ஸ்
- ரைலேண்ட் கிரேஸ்
ஃபில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘புராஜெக்ட் ஹெய்ல் மேரி’ . 2021ஆம் ஆண்டு ஆண்டி வெய்ர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, ட்ரூ கோடார்ட் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார். இதில் ரியான் கோஸ்லிங் (வெய்ருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்தவரும் இவரே), சாண்ட்ரா ஹுல்லர் , ஜேம்ஸ் ஓர்டிஸ் மற்றும் லயனல் பாய்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு விண்கலம், அதில் செயற்கை கோமாவில் இருந்து எழுந்திருக்கிறார் ரைலண்ட் கிரேஸ் ( ரியான் கோஸ்லிங்) . எந்த நினைவும் அவருக்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நினைவுகள் திரும்ப தான் ஒரு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர், ஆனால் தற்போது வானியல் ஆய்விற்காக வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறார். உடன் பயணித்த இரு விண்வெளி வீரர்களும் இறந்துவிட திக்குத் தெரியாமல் தான் விண்வெளியில் தனியாக சிக்கியிருக்கிறோம் என தெரிந்து பூமிக்கு திரும்ப முயல்கிறார். அதே சமயம் இன்னொரு ஏலியன் விண்கலத்தில் இருந்து ரைலண்ட் இருக்கும் விண்கலத்திற்கு வருகிறது நான்கு கால்கள் கொண்ட பாறை வடிவ ஏலியன் ( ‘ராக்கி ‘ என பெயர் வைக்கிறார் ரியான்) ஒன்று. இருவருமே தனித்து இருக்க ஒருவருக்கு ஒருவர் உதவியாக பயணத்தை துவங்குகிறார்கள். இருவருக்குமே தான் வாழும் கிரகத்தில் பிரச்சனை. பூமியில் சூரியன் மங்கி வர கூடிய விரைவில் பூமி முழுவதும் உறைபனி சூழும் ஆபத்து. அதாவது குளோபல் கூலிங் நிலை அதற்கு தீர்வு தேடி வருகிறார் ரைலண்ட். அதைப்போல் ஏலியன் ராக்கியின் கிரகத்திலும் பிரச்சனை. முடிவு என்ன என்பது மீதிக் கதை.
ரியான் கோஸ்லிங் நம்மூர் விக்ரம் போல கண்களின் கண்ணீர் மல்க, நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவரது நடிப்பில் அத்தனை லேயர்கள். பல காட்சிகளில் வெறும் ரியான் மட்டுமே ஒரு பாறை ஏலியனுடன் இருக்கும் பட்சத்தில், ஏலியன் கதாபாத்திரம் கிராபிக்ஸ் என்பது தெரிந்தும் ரியான் நடிப்பில் நம் உணர்வுகளையும் இடையூறு செய்து நம் கண்களிலும் உயிர் பெற்று நிற்கிறது ராக்கி.
ராக்கி என்கிற பாறை ஏலியன், கிராபிக்ஸ் ஆனாலும் கதைக்கு பெரிய பலம் ராக்கிதான். படம் முடிவதற்குள் நமக்கும் நண்பானாகி விடுகிறார் ராக்கி ஏலியன். இந்த கதாபாத்திரம் அமெரிக்க பொம்மலாட்ட கலைஞர் ஜேம்ஸ் ஓர்டிஸ் கைவண்ணத்தில் பெரும்பாலும் உண்மையான பொம்மலாட்ட முறையில் கதாபாத்திரமாக நகர வைக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. குரலும் அவரே கொடுத்திருக்கிறார்.
கிரேக் பிரேசர் ஒளிப்பதிவில் , குறிப்பாக ஐமேக்ஸ் திரையில் பார்ப்போருக்கு , ரியான் மற்றும் ராக்கியுடன் இணைந்து விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வைக் கடத்தியிருக்கிறார். டேனியல் பிரெம்பார்டன் இசை முழுக்க இன்னொரு கதாபாத்திரம் போலவே பயணித்திருக்கிறது. குறிப்பாக ராக்கி என்ன ஆனது, ரியான் என்ன ஆனார் போன்ற காட்சிகளில் நமக்கும் அந்த படபடப்பை கடத்தியிருக்கிறார் டேனியல். விஷுவல் + பின்னணி இசை படத்துக்கு மற்றுமொரு சிறப்பு.
ஒரு ஸ்கூல் டீச்சர் எப்படி விண்வெளி வீரராக உடனே செல்ல முடியும் என்கிற கேள்வி இருப்பினும், அதற்கான பதில் காட்சிகளில் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. நிச்சயம் விண்வெளி படிப்பு படிப்பவர்களுக்கு நிறைய லாஜிக் இடிக்கும். ஆனால் கதை அதுவல்ல என்பதால் பெரும்பாலும் உணர்வு முந்திக்கொண்டு நிற்கிறது.
மொத்தத்தில் ” புராஜெக்ட் ஹெய்ல் மேரி “, ‘ கிராவிட்டி ‘ படத்திற்கு பிறகு, நம்மையும் சேர்த்து விண்வெளியில் தொலைந்து போவது போல் ஒரு விண்வெளி படம் இல்லையே என நினைப்போர் நிச்சயம் இந்த படத்தை தவறவிடாமல் பார்க்கலாம்.
