×

அடுத்த பிறவியிலும் ரஜினியாக பிறக்க விரும்புகிறேன்: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேச்சு

பனாஜி: இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளை சேர்ந்த 240க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரையுலகில் ரஜினிகாந்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசுகையில், ‘‘என்னுடைய 50 ஆண்டு கால சினிமா பயணம் வேகமாக ஓடிவிட்டது. சினிமாவையும், நடிப்பையும் நான் மிகவும் விரும்புகிறேன்.

இன்னும் 100 பிறவி எடுத்தாலும் நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன். என்னை வாழவைக்கும் மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி” என்றார். இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்தின் குடும்பத்தினர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நடிகர் ரன்வீர் சிங், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Rajini ,Rajinikanth ,Panaji ,International Film Festival of India ,Goa ,56th International Film Festival of India ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா