பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர், ராதிகா ஆப்தே. தனது தனித்துவமான கதை தேர்வு மற்றும் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தமிழில் ‘தோனி’, ‘கபாலி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த ‘மெர்ரி கிறிஸ்மஸ்’, ‘சிஸ்டர் மிட்நைட்’ ஆகிய படங்கள் உலகளவில் கவனிக்கப்பட்டது. சினிமாவை தாண்டி சோஷியல் மீடியா மூலம் தனது கருத்துகளை வெளிப்படையாக ெசால்லி, சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில், இந்திய சினிமாவில் வன்முறை போக்கு அதிகரித்து வருவது குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெனடிக்ட் டெய்லர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து, ஒரு பெண் குழந்தைக்கு தாயான ராதிகா ஆப்தே, தனது கணவர் மற்றும் மகளுடன் லண்டனில் வசிக்கிறார். சமீபகாலமாக வெளியாகும் படங்கள் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். அவரது இந்த கருத்து, சமீபத்தில் இந்தியில் வெளியாகியுள்ள ‘துராந்தர்’ என்ற படத்தை மறைமுகமாக தாக்குவது போலிருப்பதாக சொல்லப்படுகிறது.
