திருவனந்தபுரம்: இந்திரஜித் சுகுமாரன் நடிப்பில் வெளியான மலையாள படம், ‘தீரம்’. ஜித்தின் டி.சுரேஷ் இயக்க, ஹீரோயினாக திவ்யா பிள்ளை நடித் துள்ளார். இப்படத்தில் சொல்லப்பட்டுள்ள விமர்சன ரீதியான கருத்துகள் காரணமாக, வளைகுடா நாடுகளில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் படம் ஓடும் தியேட்டருக்கு ஜித்தின் டி.சுரேஷ், திவ்யா பிள்ளை மற்றும் படக்குழுவினர் சென்றனர். படம் முடிந்த பிறகு சில ரசிகர்களை சந்தித்து கருத்து கேட்டனர். அதில் ஒரு ரசிகர், ‘படம் ரொம்ப மோசம். மனைவி மற்றும் குழந்தையுடன் படத்தை பார்க்க வந்தேன். இப்படியொரு விஷயத்தை சொன்ன முறை மிகவும் தவறு. இது ஒரு மோசமான படம்’ என்றார்.
இதை தொடர்ந்து தியேட்டரில் இருந்த இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதை கவனித்த திவ்யா பிள்ளை, உடனே தலையிட்டு சமரசம் செய்தார். ‘படத்தை பார்க்கும் ஒவ்வொரு வருக்கும் தனது கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அதை நாம் தடுக்கக் கூடாது. அனைவருமே படத்தைப் பற்றி பாசிட்டிவ்வாக சொல்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு’ என்று சொல்லிவிட்டு, அங்கு ஏற்பட இருந்த மோதலை தடுத்தார். மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் திவ்யா பிள்ளை, தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘ராயன்’, ‘ஏஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
