ஒரு இனத்தின் எதிர்காலத்துக்காக தியாகம் செய்யும் ஸ்ரேயா சரண், தனது மகன் தேஜா சஜ்ஜா என்ன சாதிக்க வேண்டும் என்பதை சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார். வாரணாசியில் வளரும் தேஜா சஜ்ஜா, பிழைப்புக்காக சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு ஜாலியாக இருக்கிறார். அவரை சந்திக்கும் ரித்திகா நாயக், ‘நீ ஒரு மிகப்பெரிய நோக்கத்துக்காக பிறந்தவன். இந்த உலகையே ஆளும் சக்தியை கொடுக்கும் 9 புனித நூல்களை தேடும் சூனியக்காரன் மனோஜ் மன்ச்சுவை நீதான் தடுக்க வேண்டும்’ என்று சொல்கிறார். முதலில் ராமர் கால மிராய் என்ற ஆயுதத்தை கண்டுபிடித்து, பிறகு 9வது புனித நூலை அடைய முயற்சிக்கும் தேஜா சஜ்ஜா, தர்மத்தை நிலைநாட்டினாரா என்பது மீதி கதை. அசோகர் கால கலிங்க போர், ராமர் கால மிராய் ஆயுதம், அபூர்வ சக்தி கொண்ட புனித நூல்கள் என்று, வரலாறு மற்றும் புராண சம்பவங்களை மையப்படுத்தி கார்த்திக் கட்டம்னேனி எழுதி இயக்கியுள்ளார். கற்பனை, அனிமேஷன், விஎஃப்எக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கின்றன.
‘ஹனு-மேன்’ தேஜா சஜ்ஜா, உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். தனது தாயின் லட்சியத்தை நிறைவேற்றும் அவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவருக்கு நிகரான ஒரு கேரக்டரில் மனோஜ் மன்ச்சு வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார். தீயசக்தியான அவருக்கும், நல்ல சக்தியான தேஜா சஜ்ஜாவுக்கும் நடக்கும் மோதல், ஆக்ஷன் ரசிகர்களுக்கு சரியான தீனி. தாயாக ஸ்ரேயா சரண் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். ஜெயராம், ரித்திகா நாயக், ஜெகபதி பாபு, கெட்டப் னு ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். விஷூவலில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி மிரட்டியுள்ளார். கவுரா ஹரியின் பின்னணி இசை, கர் பிராசத்தின் எடிட்டிங், மணிபாபு கரணத்தின் வசனம், நாகேந்திரா தங்காலாவின் அரங்க அமைப்பு ஆகியவை பலம் சேர்த்துள்ளன. அடுத்து வரும் காட்சியை கணிக்க முடிவதும், படத்தின் நீளமும் மைனஸ்.
