×

புல்லட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ

 

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ், அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கும் படம், ‘புல்லட்’. அமானுஷ்யம் கலந்த ஆக்‌ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் தமிழ் பதிப்பு டீசரை விஷால், எஸ்.ஜே.சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்டனர். தெலுங்கு பதிப்பு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். இப்படத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு டிஸ்கோ சாந்தி தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். அருள்நிதி நடித்த ‘டைரி’ என்ற வெற்றிப் படத்துக்கு பிறகு இன்னாசி பாண்டியன் இயக்கும் ‘புல்லட்’ படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.

கடந்த 1980களில் இருந்து 1997 வரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த டிஸ்கோ சாந்தி, கடந்த 1997ல் இருந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இப்படத்தில் அவர் மிகவும் சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார். மற்றும் வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே, ஆர்.சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கேபிஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் நடிக்கின்றனர். தென்காசி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ‘டிமான்ட்டி காலனி’, ‘டைரி’ ஆகிய படங்களை தொடர்ந்து அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags : Disco ,Innasi Pandian ,Ragawa Lawrence ,Elvin ,Khatiresan ,Vishal ,S. J. Surya ,Prithviraj ,G. V. ,Prakash Kumar ,Naga Chaitanya ,Shanti ,Arulniti ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு