×

ஏஐ மூலம் அம்பிகாபதி கிளைமாக்ஸ் மாற்றம்: தயாரிப்பாளர் மீது தனுஷ் பாய்ச்சல்

சென்னை: பாலிவுட் டைரக்டர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த இந்தி படம், ‘ராஞ்சனா’. கடந்த 2013ல் திரைக்கு வந்த இப்படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹீரோயினாக சோனம் கபூர் நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். இப்படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தை அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட், அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதுப்பித்து வெளியிட்டுள்ளது. கிளைமாக்ஸ் மட்டும் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மாற்றப்பட்டுள்ளது. இது ஒரிஜினல் படக்குழுவினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் ஆனந்த் எல்.ராய் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது தனுஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏஐ மூலம் மாற்றப்பட்டுள்ள கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் ரீ-ரிலீஸ் ஆகியிருப்பது எனக்கு அதிக மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இறுதிக்காட்சி, படத்தின் அசல் ஆன்மாவை அடியோடு சிதைத்துவிட்டது. எனது தெளிவான எதிர்ப்பையும் தாண்டி படக்குழு இதை செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் இது அல்ல. திரைப்படங்களையும், உள்ளடக்கங்களையும் ஏஐ உதவியுடன் மாற்றுவது என்பது கலைக்கும், கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். கதைசொல்லலின் நேர்மையையும், சினிமாவின் மரபையும் இது அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் விதமாக, கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Dhanush ,Chennai ,Bollywood ,Anand L. ,Rai ,Sonam Kapoor ,A. R. Rahman ,Upswing Entertainment ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்