திருவனந்தபுரம்: பிரபல மலையாள சினிமா நடிகரும், கதாசிரியரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் உடல் நலக்குறைவால் நேற்று கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர், கதாசிரியர் மற்றும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீனிவாசன் (69). 1976ல் மணிமுழக்கம் என்ற படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். யதார்த்தமான கதை கொண்ட படங்களால் மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்தியவர் ஸ்ரீனிவாசன்.
இதன் பின்னர் `ஓடறதம்மாவா ஆளறியாம்’ என்ற படத்திற்கு முதன் முதலாக இவர் திரைக்கதை எழுதினார். முழு நீள நகைச்சுவை படமான இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆனது. இதன் பிறகு வரவேற்பு, காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பட்டனப்பிரவேசம் உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதியும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். தமிழில் ‘லேசா சேலா’, ‘புள்ளகுட்டிக்காரன்’ படங்களில் நடித்துள்ளார். வடக்கு நோக்கி எந்திரம், சிந்தாவிஷ்டயாய சியாமளா உள்பட பல படங்களை இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். இவரது பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளன. சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இவர் நடிகர் ரஜினிகாந்துடன் ஒன்றாக படித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது.
கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் சற்று உடல்நலம் தேறிய இவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஆனாலும் கடந்த சில மாதங்களாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இவருக்கு உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து கொச்சி திருப்பூணித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஸ்ரீனிவாசன் மரணமடைந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும், நடிகர்களான வினீத் ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
