வைகை அணைக்கு அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் ரொக்கப்புலி என்கிற சரத்குமார், ஆதரவற்ற நிலையில் தவிக்கும் கொம்புசீவி பாண்டி என்கிற சண்முக பாண்டியனை அரவணைக்கிறார். இருவரும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை ஆந்திராவுக்கு கடத்துகின்றனர். அதை தாரணிகா தலைமையிலான போலீஸ் படை மோப்பம் பிடித்து நெருங்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. படம் முழுக்க கெத்து காட்டி நடித்திருக்கிறார், சரத்குமார். தன்னை நம்பிய சண்முக பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவருக்காக உயிரையே கொடுக்கவும் தயாராகி, குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருக்கிறார். எதிரிகளை பொளந்து கட்டுவது, தாரணிகாவை நினைத்து உருகுவது, போலீஸ் அடிக்கு பதிலடி தருவது என்று, நவரச நடிப்பில் சண்முக பாண்டியன் ஜொலிக்கிறார்.
போலீஸ் தெனாவட்டு காட்டும் தாரணிகா, காமெடி செய்யும் கல்கி ராஜா, முனீஷ்காந்த், ஜார்ஜ் மரியன் மற்றும் காளி வெங்கட், தருண்கோபி, இந்துமதி, மதன்பாப் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு நச். நீண்ட காட்சிகளின் நீளத்தை எடிட்டர் குறைத்திருக்க வேண்டும். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வழக்கமான பாணியில் எழுதி இயக்கியுள்ள பொன்ராம், காவல்துறையின் கண்ணியத்தை குறைக்கும் காட்சிகளில் கத்திரி போட்டிருக்கலாம். மக்களின் வறுமையை வளமாகவே காட்டியிருப்பது மைனஸ்.
