மும்பை: தமிழில் விக்ரம் நடித்த ‘தெய்வ திருமகள்’, ‘சைவம்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பவர் சாரா அர்ஜுன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் நந்தினியாக நடித்தார். தற்போது சாரா அர்ஜுன் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் துராந்தர் என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து இருந்தார். துரந்தர் படத்தின் வெற்றி விழாவில் சாராவிடம் தொட்டு தவறாக நடந்துகொண்டதாக நடிகர் ராகேஷ் பேடி என்பவரது வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
அதை தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ராகேஷ் பேடிக்கு 71 வயதாகிறது. பட வெற்றி விழாவில் சாரா அர்ஜுன், ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து வந்திருந்தார். அப்போது மேடையில் ராகேஷ் பேடி, சாராவை அணைத்தபடி அவரது தோளில் சாய்கிறார். பிறகு தோளில் அழுத்தி முத்தமிடுகிறார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர் ராகேஷ் பேடியை தடுக்க முயல்கிறார். ஆனால் ராகேஷ் பேடி இதை கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
சாராவுக்கு தாத்தா வயதுள்ள ஒருவர், இப்படி அத்துமீறி நடக்கலாமா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி ராகேஷ் பேடி விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘‘சாரா படத்தில் என் மகளாக நடித்து இருந்தார். ஷூட்டிங்கில் எப்போது சந்தித்தாலும் ‘ஹக்’ செய்து தான் வணக்கம்சொல்வார். இது அப்பா மகள் போன்று தான். அன்றும் அப்படி தான் செய்தேன். ஆனால் மக்கள் தான் அதை வேறு விதமாக பார்கிறார்கள். அவர்கள் தவறாக பார்த்தால் என்ன செய்ய முடியும்’’ என அவர் கோபமாக கேட்டிருக்கிறார்.
