×

நிஜ வாழ்க்கையிலும் ரஜினி சூப்பர் ஸ்டார்: கலாநிதி மாறன் புகழாரம்

சென்னை: ‘கூலி’ திரைப்பட விழாவில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பேசியதாவது:
நாகார்ஜுனா பேசும்போது, நிஜ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றார். அவர் நிஜ சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, திரைத்துறையில் இருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அவர்தான். திரைத்துறையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் சூப்பர் ஸ்டார்.

இசையமைப்பாளர் வருடத்துக்கு 3, 4 படங்கள் பணியாற்றினாலும் படத்துக்கு படம், பாடலுக்கு பாடல் வித்தியாசம் காட்ட வேண்டும். அதை அனிருத் சிறப்பாக செய்து காட்டுகிறார். ஏற்கனவே ‘மோனிகா’ பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அவர் இந்திக்கும் சென்று வந்துவிட்டார். இன்னொரு ஆஸ்கர் விருதை நமக்கு சீக்கிரமே கொண்டு வாருங்கள் என அனிருத்தை கேட்டுக்கொள்கிறேன். கதையை ஒரு மாதிரி சொல்லும் சிலர், அதை திரையில் வேறு மாதிரி காட்டுவார்கள். ஆனால் கதையும் நன்றாக சொல்லி, திரையிலும் அதை பிரமாண்டமாக கொண்டு வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். திடீரென லோகேஷ் எடை குறைந்துவிட்டார். அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. சீக்கிரமே அவர் புது அவதாரம் எடுக்கப் போகிறார். அதற்கு வாழ்த்துக்கள்.

ஜெயிலர் பட விழாவில் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்து பேசினார். அவர் சொன்னதுபோல், காவ்யாவும் சிறப்பாக செயல்பட்டார். சன் ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சென்றது. அதுமட்டுமின்றி, அதிக ஸ்கோர் உள்பட பல சாதனைகளையும் புரிந்தது. சில ஹீரோக்கள் 2 படம் ஹிட்டானாலே அவர்களது கைப்பையை தூக்க 2 பேர், செல்போனை வைத்துக்கொள்ள 2 பேர் என இருப்பார்கள். பிரைவேட் ஜெட் கூட கேட்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் அப்படி அல்ல. அவர் ஏர்போர்ட்டில் போவதை பாருங்கள், தனியாக வருவார், தனியாக போவார். தோளில் ஒரு பை மாட்டி இருப்பார். அவ்வளவு எளிமையானவர். அவர் நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார். இங்கிருந்து அவர் ஒரு போன் ெசய்தால், இந்தியாவில் எந்த முதல்வராக இருந்தாலும் உடனே அவரிடம் பேசுவார்கள். முதல்வர்கள் மட்டுமல்ல, பிரதமரும் அவர் போன் செய்தால் உடனே பேசுவார். அவர் நினைத்தால் கவர்னர் பதவியோ வேறு எந்த பதவியோ கூட பெற முடியும். ஆனால் அந்த மாதிரி ஆசைப்படாமல், 74 வயதிலும் அவர் உழைக்கிறார். நமக்கெல்லாம் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

சினிமாவில் பலர் வந்தார்கள், போனார்கள். நம்பர் 1 இடத்தில் ஒருவர்தான் இருக்கிறார். அவர் ரஜினிகாந்த். ஜெயிலர் பட விழாவில் ரெக்கார்ட் மேக்கர் என அவரைப் பற்றி சொன்னேன். ரெக்கார்ட் மேக்கரும் அவர்தான், ரெக்கார்ட் பிரேக்கரும் அவர்தான். இதிலிருந்தே கூலி படம் என்ன சாதனை புரியப்போகிறது என்பது உங்களுக்கு புரிந்துவிடும். இவ்வாறு கலாநிதி மாறன் பேசினார்.

Tags : Rajini ,Kalanithi Maran ,Chennai ,Coolie' film festival ,Sun TV Network ,Nagarjuna ,Rajinikanth ,Anirudh ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்