
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ என்ற படம், நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு நேற்று சென்னைக்கு வந்த விஜய் தேவரகொண்டா கூறுகையில், ‘எனது திரையுலக பயணத்தில் தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான ஒரு நாளாகும். ‘கிங்டம்’ படம் நாளை வெளியாகிறது என்பதை நினைத்து அதிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.
கவுதம் தின்னனூரியின் ‘ஜெர்சி’ என்ற படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை ஞாபகப்படுத்துகிறேன். ‘கிங்டம்’ படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே உருவாக்கி இருக்கிறோம். ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையில் முடியும் கதை இது. அனைத்தும் ஒரேமாதிரியான கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன. இப்படம் உணர்வுகளும், அதிரடியும் கலந்து உருவாகியுள்ளது. இது ரஜினிகாந்த் சார் படங்களை போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கும். ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வெளியே நான் புரமோஷன் செய்வதென்றால், அது சென்னை மட்டும்தான். எனக்கு சென்னையையும், தமிழக ரசிகர்களையும் மிகவும் பிடிக்கும். எனது பட டீசருக்கு பின்னணி குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி. அனிருத் சிறப்பாக இசை அமைத்துள்ளார்.
என்னால் முடியும் என்றால், அனிருத்தை கடத்தி என் பக்கத்திலேயே வைத்துக்கொள்வேன்! நான் ஏற்றுள்ள கேரக்டருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். முதலில் கான்ஸ்டபிளாக வருகிறேன். பிறகு மிகப்பெரிய மாற்றம் இருக்கும்’ என்றார். கே.என்.விஜயகுமார் வசனம் எழுதியுள்ளார். ஜோமோன் டி.ஜான், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் பாடல்கள் எழுதியுள்ளனர். பாக்யஸ்ரீ போர்ஸ் ஹீரோயினாக நடித்துள்ளார்.
