சென்னை: மதுரையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விமல் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் விமல் மேடையில் பேச வந்தார். ஆனால் அவர் பேச தொடங்குவதற்கு முன் மேடையில் கோபத்துடன் ஏறிய போட்டியாளர் ஒருவர், ‘‘என்ன நிர்வாகம் பண்றீங்க, ஒழுங்கா பண்ணுங்க’’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் போட்டியாளர்களுக்கு முறையான சான்றிதழ், மெடல், தண்ணீர் வழங்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் முறையிட்டார். அப்போது அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவரைத் தவிர்த்து பல போட்டியாளர்களும் இந்த புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சலசலப்பை அடுத்து விமல் மேடையில் இருந்து இறங்கி உடனே அங்கிருந்து சென்றார். அவரிடமும் சில போட்டியாளர்கள் போட்டியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து முறையிட்டனர். இதனால் மேலும் அங்கு பரபரப்பு நிலவியது.
