×

வீட்டில் இருப்பவர்கள் துன்புறுத்துறாங்க: விஷால் பட நடிகை கண்ணீர் வீடியோ

மும்பை: தனது வீட்டிலேயே தனக்கு துன்புறுத்தல் நடப்பதாகவும், யாராவது தனக்கு உதவ வேண்டும் என்றும் நடிகை தனு தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தின் படப்பிடிப்பின்போது, பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக பாலிவுட் நடிகை தனு தத்தா ‘மீடூ’ இயக்கம் மூலம் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், ‘சாக்லேட்’ படப்பிடிப்பில், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையைக் கழற்றிவிட்டு நடனமாடுமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் இவர் நடித்தார்.

இந்நிலையில், தனு தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதுகொண்டே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், ‘‘நான் என்னுடைய சொந்த வீட்டிலேயே பல ஆண்டுகளாகத் துன்புறுத்தப்படுகிறேன். செவ்வாய்க்கிழமை அன்று எனது நிலைமை மிகவும் மோசமானதால், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக இந்தத் தொல்லைகள் தொடர்வதால் என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலைக்கு ஆட்களை நியமித்தால், அவர்கள் திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்’’ என்று கண்ணீருடன் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Vishal ,Mumbai ,Tanu Dutta ,Bollywood ,Nana Patekar… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்