
படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்த ‘மார்கன்’ படம் ஹிட்டானதை தொடர்ந்து நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசினார். அவர் கூறுகையில், ‘எனது திரைப்பயணத்தில் நிறைய வெற்றிப் படங்களையும், தோல்விப் படங்களையும் கொடுத்திருக்கிறேன். இதில், ‘மார்கன்’ எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலான படம். எந்த படமும் ஹீரோவால் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட ஓடாது. ஸ்கிரிப்ட்டும், இயக்கமும் சரியாக இல்லை என்றால் எந்த படமும் ஓடாது. இரண்டும் சரியாக இருந்தால்தான் படங்கள் ஓடும். நான் எந்த படத்தில் நடித்தாலும், உடனே அதற்கான அங்கீகாரத்தை இயக்குனருக்கு அளித்துவிடுவேன்.
‘மார்கன்’ படம் ஹிட்டானதற்கு காரணம், அதன் இயக்குனர் லியோ ஜான் பால். அவர் தனது வேலைக்கு உண்மையாக இருந்தார். இதற்கு முன்பு எத்தனை படத்தில் நடித்திருந்தாலும், இனிமேல் எத்தனை படங்களில் நடித்தாலும், ‘பிச்சைக்காரன் 1’ படத்துக்கு சமமாக எந்த படமும் இருக்க முடியாது. இயக்குனர் சசி கதை சொன்னவுடன் நான் அழுதேன். இதுவரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை அதில் சசி சொல்லியிருந்தார். அடுத்து என் நடிப்பில் ‘சக்தித் திருமகன்’ படம் வருகிறது. தொடர்ந்து ‘லாயர்’ படத்தில் நடிக்கிறேன்’ என்றார். ஏற்கனவே அவர் நடித்து முடித்த ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘வள்ளி மயில்’ ஆகிய படங்கள் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை.
