என்னோட ராசி நல்ல ராசி 15
புத்திக் கூர்மை, பொருள் நாட்டம்
மிதுன ராசியை ஆங்கிலத்தில் ஜெமினி என்பர். இது காற்று ராசி. ராசி வரிசையில் மூன்றாவது ராசி. இதன் அதிபதி புதன் [mercury]. தமிழில் ஆனி மாதத்தில் பிறந்தவர், ஆங்கில மாதத் தேதிகளில் மே மாதம் 21 முதல் ஜூன் 20 தேதிக்குள் பிறந்தவர் , மிதுன ராசி மற்றும் மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களில் பலருக்குக் கீழ்க்காணும் பொதுப்பண்புகள் காணப்படும். இரட்டைக் குணம் இந்த ராசியின் தனித்தன்மை ஆகும். மிதுன ராசிக்குரிய கிரகம் புதன். புத்திகாரகன், அதி தேவதை பெருமாள். பெரும்பாலும் ஒருவர் ஜாதகத்தில் இக்கிரகம் சூரியனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகத்தைக் கொடுக்கும் அல்லது சுக்கிரனுடன் சேர்ந்து வசீகர யோகத்தைக் கொடுக்கும். அரிதாக பிற கிரகங்களுடன் இணைந்திருப்பதைக் காணலாம். வியாழனுடன் இணைந்தால் அதி அற்புதக் கவித்துவம் மற்றும் கலை நாட்டத்தையும் பிரபல்யத்தையும் அளிக்கும். இசைவண்மைக்கும் புதன் முக்கிய கிரகம் ஆகும். மிதுனம் என்பதில் ஆணும் பெண்ணுமாக உருவம் இருப்பதால் அலி என்று கருதிவிட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் புத்தி சார்ந்து முடிவுகள் எடுப்பார்கள். பெண்மைக்குரிய நளினமும் ஆணுக்குரிய கம்பீரமும் கொண்டவர்களாக மிதுன ராசிக்காரர்கள் இருப்பர்.
ஜனக் கவர்ச்சி
பொதுவாக மிதுன ராசிக்காரர்கள் பொது ஜனக் கவர்ச்சி உடையவர்கள். உலகில் பலரையும் கவர்ந்த ஹாலிவுட் எம் ஜி ஆர் எனப்படும் எரால் ஃப்லைய்ன், ஜான் கென்னடி, மர்லின் மன்றோ, புல்லின் இதழ்கள் என்ற கவிதை நூல் மூலமாக உலகில் புதுக் கவிதை வடிவத்தைப் பிரபலமாக்கிய ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மன் போன்றோர் இந்த மிதுனராசியில் பிறந்தவர்கள்.
தோற்றப் பொலிவு
மிதுன ராசிக்காரர் ஒல்லியாக அதிக உயரம் இல்லாமல் இருப்பார். சிலர் பியூனியாக [puny] கூட இருப்பதுண்டு. கண்கள் வெகு பிரகாசமாக இருக்கும். எப்போதும் குறும்பு கொப்பளிக்கும். மூளையின் அதிவேகத்தை காட்டும் வகையில் இவர்களின் கண்கள் எப்போதும் பரபரப்பாகவும் ஒளியுடனும் காணப்படும். மனதுக்குள் ஒரு கேலியும் கிண்டலும் ஓடிக்கொண்டே இருப்பதால் கருவிழிகள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டே இருக்கும். மூக்கு நீளமாகவும் யாரோ நிமிண்டிவிட்டதைப்போல நடுப்பகுதியில் கொஞ்சம் திருகியும் இருக்கும். பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்கள் வயதான பிறகும் கூட ஒல்லியாகவே இருப்பார்கள். தன் வயதில் பத்து வயது குறைந்து இளமையாகக் காட்சியளிப்பர். சிலர் காற்றில் பறந்துவிடுவதை போல மிக மிக ஒல்லியாக இருப்பதும் உண்டு. இவர்களின் நெற்றி ஏறு நெற்றியாக இருக்கும். இதனால் பலருக்கு நடு வயதிலேயே முன் வழுக்கை விழுந்துவிடும். நெற்றி அகலமாக இருந்து இவர்களின் மேதா விலாசத்தைப் பறை சாற்றும்.
நிதானம்
மிதுன ராசிக்காரர் நிதானமாக சிந்தித்து செயல்படுவர். மேஷ ராசிபோல உணர்ச்சி வசப்பட்டு கொதிப்படைய மாட்டார். ரிஷப ராசி போல மனதுக்குள் வைத்துக்கொண்டு அழுத்தமாக ஒன்றுமே நடக்காதது போல இருக்க மாட்டார். நிதானமாக ஆராய்வார். சிந்தித்துச் செயல்படுவார். கையில் ரூபாய் நோட்டை வைத்து எண்ணிக்கொண்டே சுற்றிலும் கண்காணிப்பவரும் பதில் சொல்லிக்கொண்டே ஜோக் அடிப்பவரும் மிதுன ராசிக்காரராக இருப்பதுண்டு. சிலர் பல மொழி வித்தகராகவும் இருப்பார்கள். எந்த மொழியையும் சீக்கிரம் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தவர்கள். எந்த இடத்துக்கும் adap ‘செட்’ ஆகிவிடுவர். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அனைத்துத் தரப்பினருடனும் அட்ஜஸ்ட் செய்துகொள்வர்.
இரட்டைத் தன்மை
மிதுன ராசியினரிடம் இருவேறுபட்ட குணங்கள் உண்டு. ஒரு இடத்தில் கலகலப் பாக இருக்கும்; இவர் மற்ற இடத்தில் மௌனியாக இருப்பார். சில சூழ்நிலையில் இப்படித்தான் வாழவேண்டும் என்று இலட்சியவாதி போலப் பேசுவார். அடுத்த வேளை எப்படியும் வாழலாம் என்பார். ஒரு நாள் திமுகவை ஆதரிப்பார்; மறு நாள் அதிமுகவை ஆதரிப்பார். ஒருவரிடம் நாத்திகம் பேசுவார் . இன்னொருவரிடம் ஆத்திகம் பேசுவார். ஆனால் இரு இடங்களிலும் சரியான வாதங்களை முன் வைப்பார். TURN COAT அடிப்பதில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது.
கற்பனா சக்தி
புதன் ராசியில் பிறந்த இவர்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடுவதில் கெட்டிக்காரர்கள். சிறு வயதில் சக மாணவர்களிடம் எங்கள் வீட்டில் பத்து யானை இருந்தது. நான்தான் குளிக்க ஆற்றுக்குக் கூட்டிக்கொண்டு போவேன். நான் சொன்னால் எல்லா யானைகளும் அப்படியே கேட்கும். உட்கார் என்றால் உட்காரும்; நட என்றால் நடக்கும் என்று கதை அளந்துவிடுவர். தன்னை ஸ்பைடர்மேன் போலவும் சக்திமான் போலவும் கற்பனை செய்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவார்.
கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்
மிதுன ராசியின் அதிபதியான புதன் அறிவுக்கு எழுத்துக்கும் பேச்சுக்கும் அதிபதி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர் எப்போது எங்கு பேசினாலும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களை முன் வைப்பார். பள்ளிப் படிப்பை முடிக்காதவர் கூட ஏனோதானோ என்று பேச மாட்டார். இவர் பேச்சை யார் கேட்டாலும் அதை அப்படியே நம்பிவிடுவர். அவ்வளவு ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் தன் பேச்சில் எழுத்தில் பயன்படுத்துவார். பேசிய பேச்சை ட்விஸ்ட் செய்து பொருள் உரைப்பதில் வல்லவர். காட்டமாகப் பேசிவிட்டு பிறகு ‘‘இல்லையில்லை நான் பேசியதைக் சிந்தித்துப் பாருங்கள். அதில் என் மனமார்ந்த பாராட்டு இருப்பது தெரியும்’’ என்பார். அதில் பாராட்டு இருப்பது பின்னர் நமக்குப் புரியும். சிலேடை பேச்சில் வல்லவர். வார்த்தைகளைக் கையாளுவதில் கெட்டிக்காரர். இரு பொருள்பட பேசி தப்பித்துக்கொள்வார். வஞ்சப் புகழ்ச்சியில் கெட்டிக்காரர்.
வாய் ஜாலம்
பொதுவாக மிதுன ராசிக்காரர் யாரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். இவரது பேச்சை எதிரிகள் கூட ரசிப்பார்கள் அதனால் இவர் தன் எதிரி என்று மனதுக்குள் முடிவு செய்திருப்பவர் கூட இவரை தன் எதிரியாகக் கருத மாட்டார். மிதுன ராசிக்காரர் மிகவும் வேகமாகப் பேசுவார். இவர் அளவுக்கு புத்திசாலித்தனம் இருப்பவரால் மட்டுமே இவரோடு நட்பு வைக்க முடியும். இவரது பேச்சைப் புரிந்துகொள்ள முடியும். இவரது நடவடிக்கைகளின் உள்ளர்த்தத்தை உணர முடியும். இடத்துக்கு ஏற்றவாறு தனது நிலைப்பாடுகளை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வார்.
பிறந்த வீடு ஏழ்மை; புகுந்த வீடு செல்வம்
மிதுன ராசிக்காரர் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வசதியானவர் போன்ற உணர்வுடன் இருப்பார். ஏழையைக் காதலித்து சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு காதல் வாழ்க்கையை விரும்புபவர் இவர் கிடையாது. அப்படி இவர் விரும்பினால் இவரது காதலி அவரது காதலரே விலை மதிப்பு மிக்க அறிவுச் சொத்தாக பலனளிப்பார் என்று இவர் நம்பியிருக்கலாம். இவர் இலட்சியவாதி கிடையாது. யதார்த்தவாதி. இளமையில் ஏழ்மை இருந்தாலும் எதிர்காலத்தில் வளமாக இருப்பார். அப்பா ஏழையாக இருக்கலாம் மாமனார் ஏழையாக இருக்கக் கூடாது என்ற நம்பிக்கை உடையவர்.
உள்ளும் புறமும்
மிதுன ராசிக்காரர் கேலியாக ஜாலியாக [witty and humorous] பேசுவதில் வல்லவராக இருப்பார். மிதுன ராசிக்காரருக்கு இரட்டைக் குணம் என்பதால் இவர் உள்ளும் புறமும் வேறாக இருக்கும். இவர் பேச்சை உண்மையென்று காதலித்துவிட்டு திருமணம் எப்போது செய்யலாம் என்று கேட்டால் நான் உன்னைக் காதலிப்பதாக எப்போதாவது சொன்னேனா? என்று அந்த பெண்ணை மடக்கிக் கேட்டுவிட்டு ‘சாரி’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். Break ups என்பது இவர் வாழ்க்கையில் சாதாரணம். பழகும்போது இனியவராக தோன்றும் இவர் பிரிந்த பிறகும் இனியவராகவே தோன்றுவார். அதுவே அவரது சாமர்த்தியம். எங்கும் எதிலும் பிடி கொடுக்காமல் கவனமாகப் பழகுவார்.
வார்த்தைச் சித்தன்
மிதுன ராசிக்காரர் மற்றவரிடம் போட்டு வாங்குவதில் வல்லவராய் இருப்பார், இவரிடம் பேசுவோர் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் நினைக்காத அர்த்தத்தில் நம் பேச்சைத் திரித்துவிடுவார். நம் வார்த்தைகளே நமக்கு வினையாகிவிடும். மற்றவரின் ரகசியங்களை அறிவதில் ஆவல் உடையவர். இவரிடம் பேசுவோர் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும். நயமாகப் பேசி ரகசியங்களைப் பிடுங்கி விடுவார்.
வெற்றிச் சூத்திரதாரி
சிலர் உள்ளுக்குள் கோழைகளாக இருந்தாலும் வெளியில் வீரனைப்போல காட்டிக் கொள்வதுண்டு. அதனால் இவர்களைக் கையாலாகாதவர்கள் என்று முடிவு செய்து விடக் கூடாது. சரியான தருணம் வரும்போது சிலர் போட்டுக் கொடுத்து காரியம் சாதிப்பர். சிலர் மொட்டைக் கடுதாசி எழுதிப்போட்டும் ஆளைக் காலி செய்து விடுவதும் உண்டு. பொதுவாக இவர்கள் யாரையும் நேரடியாக எதிர்த்து நின்று சண்டை போட மாட்டார்கள். கராத்தே படித்திருப்பார் ஆனால் சண்டை எல்லாம் போட மாட்டார். படித்தவர் கூட... ஆனால் எதிரிகளைக் காலி பண்ணிவிடுவார்கள். முரடனை, முட்டாளைப் பகைக்கலாம் புத்திசாலியைப் பகைக்கலாமா? சாணக்கியத்தனம் மிக்கவராக விளங்குவார்.
கிரக சேர்க்கை
ஜாதகத்தில் புதனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பவர் துணிந்து வெடுக்கென பேசுவர், சனி இருந்தால் பூடகமாகப் பேசுவர், வியாழன் இருந்தால் அறிவாளித்தனமாக பேசுவர். கவிதை புனைவர். சூரியன் சேர்ந்திருந்தால் கனகச்சிதமாக அளந்து பேசுவர். காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பர். சுக்கிரன் இருந்தால் சர்க்கரைப் பேச்சினால் மற்றவரைக் கொக்கிப் போட்டு இழுத்துவிடுவர்.
தொழில் ஆர்வம்
மிதுன ராசிக்காரர் வாய்ச் சவடால் மிகுந்தவர். அதனால் வாயால் பேசி காரியம் சாதிக்கும் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவார். சேல்ஸ்மேன், ரேடியோ ஜாக்கி, அலுவலகத்தில் பொதுஜனத் தொடர்பாளர் [PRO], டெலிபோன் ஆபரேட்டர், மதப் போதகர், பிரச்சாரம் செய்பவர், மேடைப் பேச்சாளர், அரசியல் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், ஜோதிடர், மார்க்கெட்டிங் போன்ற பணிகள் இவருக்கு ஏற்றவை. பலமொழி வித்தகர். அதனால் பல மொழிகளில் கலந்து பேசுவார். அடுக்குமொழியில் பேசுவார் ஆளுக்கேற்றபடி பேச்சை மாற்றிப் பேசுவார். உலகின் அத்தனை கெட்ட வார்த்தைகளும் இவர்களுக்குத் தெரியும்; தக்க சமயத்தில் நச்சென்று எடுத்து விடுவார்கள். ஆனால், அவை இவர்களுக்குத் தெரியும் என்பது வேறு யாருக்கும் தெரியாது.
எழுத்துத் திறன்
எழுத்துத் திறமை இருப்பதால் சிலர் பத்திரிகையாளராக வருவர். இவர்களின் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வெற்றி பெறுவர். மே 21ஐ ஒட்டி பிறந்த சிலருக்கு ரிஷப ராசியின் இயல்புகள் கொஞ்சம் இருக்கும். அப்படிப்பட்டவர் களுக்கு இசையறிவும் நிதானமும் (சோம்பலும்) இருக்கும். இவர்கள் திரையுலகில் மெட்டுக்கு பாட்டெழுதும் சிறந்த பாடலாசிரியர்களாக வருவர். கவிதை, கதை, நாடகம் எழுதுவதில் சிலர் ஆர்வம் காட்டுவர். இசைக்கச்சேரி நடத்துவர். புதனுடன் ராகு சேர்க்கை இருந்தால் மேனாட்டு சங்கீதமும் குரு சேர்க்கை இருந்தால் கர்நாடக் சங்கீதமும் சனி சேர்க்கை இருந்தால் நாட்டுப்புற இசைக் கலைஞர்களாகவும் இருப்பார்.
பல வேலைக்காரர்
மிதுன ராசிக்கார்ர் அஷ்டாவதானியாக அல்லது தசாவதானியாகக் கூட இருப்பார். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதில் வல்லுனர்கள். இவர்களிடம் பல திறமைகள் ஒருங்கே காணப்படும். கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் ஒரு மாணவர் கவிதை, கதை, turn coat, ad act, பேச்சுப் போட்டி என கலந்து கொண்டால் அவர் மிதுன ராசிக்காரராக இருப்பார். கல்லூரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர். தரமான உரையைத் தயாரித்து வழங்குவார். தெளிவாக பாடம் எடுப்பார். மிகச் சிறந்த பேராசிரியர்கள், சிலர் பதிப்பாளராகப் புகழ் பெறுவதுண்டு அச்சகம், புத்தக விற்பனை இவர்களுக்கு ஏற்ற தொழில் ஆகும்.
கணக்கில் கெட்டிக்காரர்
இவர் வங்கிப் பணிக்கு, பைனான்ஸ் நிறுவனத்துக்கு ஏற்றவர். எண்ணறிவும் எழுத்தறிவும் நினைவாற்றலும் புத்திக் கூர்மையும் பெற்றவர். கணக்கில் கெட்டிக்காரர் [comfortable with figures - in boththe the sense]. கணக்குப் பிள்ளை, அக்கவுண்டன்ட், ஆடிட்டர் [கணக்காயர்] வேலைக்கு ஏற்றவர்கள். இவர்கள் அமைதியாக சொல்லும் ஒரே கமெண்ட்டில் எல்லோரையும் சிரிக்க வைப்பார்கள். ஆனால், எதுவுமே நடக்காத மாதிரி தன் பாட்டுக்கு சிவனே என்று தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அல்லது முதலாளியின் அறைக்குள்போய் சீரியசாகப் பேசிவிட்டு வெளியே வருவார்கள். தனது ஒவ்வொரு திறமைக்கும் ஒரு ரசிகையும் பெற்றிருப்பார். ஒரே சமயத்தில் பல தொழில்களைச் செய்வார். அவற்றிற்கான நேரத்தைக் கண்டுபிடிக்க அவரால் முடியும். இவர் கொள்கைகள் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப தனது நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்வார்.
மூளைக்கு வேலை
இவர் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் அவரால் தூங்கும்போது கூட சிந்திக்க முடியும். தன் சிந்தனைகளை ஆலோசனைகளைக் கூறி தன் பிசினசை தக்க ஆட்களைக்கொண்டு இலாபமாக நடத்துவார். அதிகாலையில் எழுந்து விடுவார். இவரால் அதிக நேரம் தூங்க இயலாது. ஒரே நேரத்தில் பல தொலைபேசி அழைப்புகளுக்கும் கோபப்படாமல் பொருத்தமாகப் பதில் சொல்லி தன் வேலையை வெற்றி கரமாகச் செய்வார். இவர் எப்போதும் தன்னைப்பற்றி எழுதுவதைப் பேசுவதை விரும்பமாட்டார். பத்திரிகை எடிட்டர் பணிக்கு சரியான ஆள் வேண்டும் என்றால் அது இவர்தான். பல எழுத்தாளர்களை இவர் உருவாக்குவார். மிதுன ராசிக்காரர் பெரும்பாலும் புனை பெயரில் எழுதுவார். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
விரும்பமாட்டார்.
இப்படியும் சிலர் இருப்பதுண்டு...
மிதுன ராசிக்காரருக்கு சுபர் பார்வை இன்றி சனி - ராகு போன்ற பாவ கிரகச் சேர்க்கை ஏற்பட்டால் அவர்களில் சிலர் குறிப்பிட்ட திசா புத்தி வரும் காலகட்டங்களில் தன் வாக்குத் திறமையால் சில மோசடி வேலைகளில் ஈடுபடுவர். சதுரங்க வேட்டை படத்தில் காட்டுவதுபோல சிலர் மோசடி வேலைகளில் தெரிந்தே ஈடுபடுவர். மற்றவர்களை முட்டாளாக்கும் வேலைகளை செய்வதில் இவர் கில்லாடி. அதில் சந்தோஷம் காண்பர். ஊரில் எத்தனை முட்டாள்கள் இருக்கின்றனர் என்பதை அறிய ஆசைப்படுவார். எதையாவது ஒரு திட்டத்தை விளையாட்டுக்காகச் சொல்லி வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் நம்ப வைத்துவிடுவார். பிறகு மூன்றாம் நாள் வந்து அந்தப் பேச்சை வேறு மாதிரி திரித்துப் பேசி அந்தத் திட்டம் வேண்டாம் நமக்கு சரிவராது என்று சொல்லி விடுவார். இரண்டையும் அவர் பேச்சைக் கேட்பவர்கள் நூறு சதவீதம் நம்புவர்.
நெகட்டிவ் மிதுனர்கள்
புதனின் ஆற்றல் நெகட்டிவாக இருந்தால் சிலர் சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்வர். சிலர் செக் மோசடியில் ஈடுபடுவர். அரசுவேலை அல்லது வெளிநாட்டு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி power brokers ஆக இருந்துகொண்டு ஆதாரம் இல்லாத வகையில் மற்றவர் பணத்தைப் பறித்து விடுவர், மாட்டினாலும் கம்பி எண்ண மாட்டார்கள். சிவில்கேஸ் தானே ஜாமீன் பெற்று வெளியே வந்து ஜாம் ஜாம் என்று வாழ்வார்கள். அபராதம் கட்டுவர் அல்லது வக்கீல் வைக்காமல் தானே வாதாடி வெற்றி பெற்றுவிடுவர். சொந்தப் பணம் போடாமல் பிசினஸ் செய்வதில் கெட்டிக்காரர்கள்; இவர்களுக்குப் பணக்கார நண்பர்கள் அல்லது காதலிகள் இருப்பதுண்டு. ஏழைகளுக்காக இரக்கப்படுவது; உதவுவது; தொண்டு செய்வது போன்றவற்றில் காலத்தை வீணடிக்க மாட்டார்கள். மிதுன ராசிக்கு நோ சென்டிமென்ட்ஸ். நோ எமோஷன்ஸ்; வெற்றி ஒன்றே குறிக்கோள்.
(தொடரும்)
