×

இந்த வார விசேஷங்கள்

3.1.2026 – சனிக் கிழமை மார்கழி ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிக உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி, நடராஜப் பெருமானுக்கு மிகச் சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு “திருவாதிரை திருவிழா” என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லாப் பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி அவரைத் துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக் காட்டியதாக புராண வரலாறு.நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதுதவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு. திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இத்திருவிழாவின்போது பெருமான் சூரிய பிரபை, சந்திரப் பிரபை, பூத வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் முதலிய வாகனங்களில் திருவீதி உலா வருவார். அதன்பிறகு பிட்சாடனர் வடிவத்தில் தங்கத் தேரில் வர அதற்கு மறுநாள் தேர் உற்சவம் நடைபெறும். இந்த விழாவின்போது திருவாதிரைக் களி படைப்பார்கள்.. பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், 7 காய்கறிகளை கொண்டு கூட்டு என்று பல்வேறு காய்கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும். அந்தக் களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.

3.1.2026 – சனிக் கிழமை, சடைய நாயனார் குருபூஜை

சடைய நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர், சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர். அவர் குருபூஜை இன்று.

4.1.2026 – ஞாயிற்றுக் கிழமை ரமண மகரிஷி ஜெயந்தி

ரமண மகரிஷி ஜெயந்தி விழா பொதுவாக டிசம்பர் 30ஆம் தேதி (அவரது பிறந்த தேதி) அல்லது மார்கழி மாதத்தில் வரும் புனர்பூச நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது, இதில் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் மற்றும் பிற ரமணர் மையங்களில் சிறப்பு பூஜைகள், வேத பாராயணங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இன்று மார்கழி புனர்பூசம்.

5.1.2026 திங்கட்கிழமை பரமஹம்ச யோகானந்தா பிறந்த தினம்

1893-ம் ஆண்டு பிறந்த பரமஹம்ச யோகானந்தர் இந்தியாவைச் சேர்ந்த யோகி, துறவி மற்றும் குரு ஆவார். பல்வேறு விரிவுரைகள் மற்றும் கற்பித்தலின் மூலமாக இந்தியாவின் தொன்மையான பழக்கவழக்கங்களையும், தியானத்தின் பாரம்பரியத்தையும் உலகெங்கும் பரப்பினார். இவரது யோகியின் சுய சரிதை என்னும் நூல் சிறந்த ஆன்மிக வழிகாட்டுதல் நூலாகக் கருதப்படுகிறது. நான்கு மில்லியன்களுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான இந்நூல், 21-ம் நூற்றாண்டின் நூறு மிகச்சிறந்த ஆன்மிக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் யோகா ஆசிரியராக தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்த முதல் இந்தியர் இவரே. தன் மரணத்துக்கு முன்னரே அதுபற்றி சில நாட்களாகவே குறிப்பிட்டு வந்த யோகானந்தர் 1952-ம் ஆண்டு மறைந்தார். அவர் பிறந்த நாள் இன்று (ஜனவரி 5)

6.1.2026 – செவ்வாய்க் கிழமை சங்கடகஹர சதுர்த்தி (அங்காரக சதுர்த்தி)

எந்தச் செயலைச் செய்தாலும் அதில் சில இடர்பாடுகள் வருவதுண்டு. நம்மால் நீக்கிக் கொள்ள முடிந்த இடர்பாடுகள், நம்மால் நீக்கிக் கொள்ள முடியாத இடர்பாடுகள் என்று இரண்டு வகைப்படும். நம்மால் நீக்கிக் கொள்ள முடியாத இடர்பாடுகளை (சங்கடங்களை) நீக்குவதற்கு சதுர்த்தி விரதம் இருக்க வேண்டும். அன்று வேழ முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருடைய ஆலயத்திற்குச் சென்று, அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபட்டால் எந்த விக்கினங்களும் இன்றி நிறைவேறும். செவ்வாய்க் கிழமை சங்கட ஹர சதுர்த்தி விரதம் வந்தால் அந்த நாள் சிறப்பான நாள். அங்காரக சதுர்த்தி நாள் என்று சொல்வார்கள். அங்காரகன் என்றால் செவ்வாய். செவ்வாய்க்கு கிரக அந்தஸ்து தந்தவர் விநாயகர் என்பார்கள். எனவே இந்த நாளில் விநாயகர் விரதம் இருப்பது சாலச் சிறந்த பலன்களைத் தரும்.

6.1.2026 – செவ்வாய்க் கிழமை அகத்தியர் சித்தர் குருபூஜை

அகத்தியர் சித்தர் குருபூஜை என்பது அகத்திய முனிவரின் பிறந்த நட்சத்திரமான மார்கழி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று உலகம் முழுவதும் உள்ள அகத்தியர் கோயில்கள் மற்றும் சித்தர் பீடங்களில், சித்தர் நெறிமுறைகளின்படி, அகத்தியர், லோபா முத்திரை சமேதராக சிறப்பு பூஜைகள், யாகங்கள், மூலிகை வழிபாடுகள் மற்றும் அன்னதானங்களுடன் கொண்டாடப்படும்

7.1.2026 – புதன் கிழமை, தியாகராஜ ஆராதனை

தியாகராஜ ஆராதனை இன்று திருவையாறில் நடைபெறுகிறது. இது தியாகராஜரின் 179-வது ஆராதனை விழா, ஜனவரி 3-ல் தொடங்கி 7-ல் நிறைவடையும். இந்த இசைத் திருவிழா, தியாகராஜ சுவாமிகள் முக்தி அடைந்த தினமான பகுல பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது,

9.1.2026 – வெள்ளிக் கிழமை, இயற்பகையார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையில் சிவத்தொண்டு புரிந்து, எல்லையற்ற பக்தியால், சிவ பரம் பொருளை வணங்கி, அவருடைய பேரருள் பெற்றவர்கள். சிவனுடைய அடியார்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஆனால், ஏன் 63 அடியார்களை மட்டும் தொகையடியார்கள், நாயன்மார்கள் என்று பட்டம் சூட்டி அவர்கள் குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத அரும்பெரும் செயலை, பக்தியின் எல்லை நிலத்தில் நின்று, செய்தது நமக்குப் புலப்படும். நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த அருஞ்செயல்களைச் செய்ததால் அவர்கள் சிவனருட் செல்வர்களாக விளங்குகின்றார்கள். அந்த சிவனருட் செல்வர்களுடைய குருபூஜையை நடத்துவதன் மூலமும், கலந்து கொள்வதன் மூலமும் எல்லையற்ற நலன்களைப் பெறலாம். பூம்புகார் ஒரு காலத்தில் மிகப்பெரிய துறைமுகம். சோழ நாட்டின் தலைநகர். பூம்புகாரில் மார்கழி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் இயற்பகை நாயனார். பொதுவான இயற்கை குணத்திற்கு எதிர் குணம் கொண்டவர் என்பதால் இவருக்கு இயற்பகை நாயனார் என்ற பட்டப் பெயர்.சிவனடியார்க்கு அடிமை என்ற நிலையில் சிவத்தொண்டு புரிவதையே தம்முடைய வாழ்வின் நோக்கமாக கொண்டதாலும், அதை இயல்பாகவே செய்யும் தன்மை கொண்டிருந்ததாலும் இவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர். இந்த காரண பெயருக்கு ஏற்ற சம்பவம் ஒன்று அவருடைய வாழ்க்கையில் நடைபெற்றது. அது சாதாரண மனிதர்கள் வாழ்வில் நடக்கக் கூடாத ஒரு பயங்கரம். ஆனால். ஆத்ம சுத்தம் மிகுந்தவர்கள், பக்தியில் சிறந்தவர்கள் இதை வேறொரு எல்லையிலிருந்துதான் பார்ப்பார்களே தவிர உலக வழக்குகளில் அகப்பட்டு விமர்சிக்க மாட்டார்கள். அப்படி என்ன இந்த இயற்பகை நாயனார் செய்துவிட்டார் என்று நீங்கள் நினைக்கலாம்.சிவனடியார்களுக்கு வாரிவாரி வழங்கும் வள்ளலான இவரிடம், ஒரு சிவனடியார் வந்து, இவருடைய மனைவியை தானம் கேட்டார். இவர் மனைவியின் முகத்தைப் பார்த்தார். இது சிவச் சோதனை என்று சிந்தை சொல்ல தெளிவடைந்தார். இறைவன் எந்த நிலையிலும் கைவிட மாட்டான் என்கின்ற ஆத்மசுத்தி இருப்பவர்களுக்கு உலக விமர்சனங்கள் தடையாக இருக்காது. அவருடைய மனைவி தயக்கமின்றி சொன்னாள்.“அடியார்களுக்கு எம்மை விற்கவும் தகுமே என்று சொல்வார்கள். ஒரு அடியாரோடு அவருக்கு பணிவிடை செய்ய நான் செல்வதாக இருந்தால் மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார். இதனை உலகம் ஏற்குமா? உறவினர்கள் ஏற்பார்களா? கடும்போர் மூண்டது. தன்னுடைய வாள் வலியாலும், தோள் வலியாலும், உறவினர்களையும் எதிர்த்தார். இயற்பகை நாயனார் பூம்புகாரிலிருந்து சிவனடியாரோடு தன் மனைவியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். இயற்கைக்கு மாறுபட்ட செயலையும் செய்யத் துணிந்தவர் என்பதனால் அவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர். அதனால்தான் சுந்தரர், திருத்தொண்டத்தொகையில், “இல்லையே என்னாத இயற்பகை நாயனாருக்கு அடியேன் “ என்று உள்ளம் உருகிப் பாடுகின்றார். தனக்காக இவ்வளவையும் செய்தார் என்று உளம் பூரித்த சிவ பெருமான் அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் ஏறி அருட்காட்சி தந்தார்.” என்னே, உன்னுடைய பக்தி! உன்னுடைய பிரேமம்! எந்தவித சஞ்சலமும் இல்லாது ஒரு செயலைச் செய்வது என்பது சாதாரண மனித ஆற்றலுக்கும் மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது. அதை நீ செய்தாய்.நீ புனிதன்!அசல் சிவன் அடியார் !நீவிர் இருவரும் வாழ்வாங்கு வாழ்ந்து, வற்றாத வளம் பெற்று, சிவபதம் அடைவீர் “ என்று அருளி மறைந்தார் .அவருடைய குரு பூஜை தினம் இன்று. இப்படி பகையை வென்று ,தன் மனைவியோடு சிவனடியாரை கொண்டு போய் விட்ட இடம் திருச்சாய்க்காடு. இப்பொழுதும் பூம்புகாருக்கு அருகில் இத்தலம் இருக்கிறது. சாயாவனம் என்றும் பெயர். இறைவன் திருநாமம் சாயாவனேஸ்வரர். அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும். இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயா வனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திர லோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். அம்மனுக்கு “குயிலினும் இனி மொழியம்மை’ என்ற திருநாமம் . உடனே சிவன் தோன்றி, “”இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழி படவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.

விஷ்ணுபிரியா

Tags : Marghazi Aruthra Darishanam Marghazi ,Thiruvathirai ,Marghazi ,Natarajab ,Peruman ,Thiruvathirai Festival ,
× RELATED கள்வர் ஆழ்வாரான கதை