பகுதி – 11
‘‘நம் திருமணம் எப்பொழுது?’’
‘‘ஒரே ஒரு வேண்டுதல்தான் உங்களிடம் நான் கோருவது. தாங்கள் இதை தயை கூர்ந்து அருள வேண்டும். தாங்கள் தினந்தோறும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு ததியாராதனை என்கிற வகையில் உணவு வழங்கி அவர்களை கெளரவிக்க வேண்டும்.’’‘‘நிச்சயம் செய்வோம். நாம் இணைந்துவிட்டால், எனக்கு எதுவும் சாத்தியமே! நீ உனக்காக பொன்னோ, பொருளோ கேட்கவில்லையே! ஆண்டவன் பணிதானே செய்யச் சொல்கிறாய். பெருமாளின் ஆசி நமக்குண்டு!’’
திருமணம் நடந்தேறியது. திருமண நாளில் ஆயிரத்தெட்டு வைணவர்கள் வயிறார உண்டு மனதார வாழ்த்தியது கண்டு ஊரே மெச்சியது. தினமும் நீலன் என்கிற பரகாலன் ஒவ்வொரு நாளும் குமுதவல்லியுடன் இணைந்து அந்தப் பணியைச் சீராகச் செய்து வந்தான்.அவனிடமிருந்த பொன்னும் பொருளும் இந்த இறைப் பணிக்காகவே சென்றது. சோழ அரசுக்கு செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தாததில், அரசர் வெகுண்டார். நீலன் என்கிற திருமங்கை மன்னனுக்கு, தன்னிடம் நாட்டை அளித்த பின், சோழ அரசர் திறை கேட்பது பிடிக்கவில்லை. கொடுக்க மறுத்ததில் சோழ அரசு போர் தொடுத்தது. ஆனாலும் திருமங்கை மன்னனே போரில் வென்றான்.
சோழ அரசனால் இதை ஏற்க முடியவில்லை. தந்திரம் செய்து, திருமங்கை மன்னனை திருநரையூருக்கு வரவழைத்தான். எந்தக் கோவிலில் அவனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடந்தேறியதோ, அதே கோவிலிலேயே அவன் சிறை வைக்கப்பட்டான். திறை செலுத்தத் தவறினால் சிறை என்பதில் அரசன் முடிவுடனிருந்தான். திருமங்கை மன்னனின் மனம் முழுமையும், அடியாருக்கு உணவு வழங்குவதில் தடை ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதே நிறைந்திருந்தது.
ஆகாரமின்றி மூன்று நாட்கள் கழிந்தன. மூன்றாம் நாளிரவு நாச்சியாரே அவனுக்கு அமுது ஊட்டி விட்டார். அவன் மனதில், மலையப்பனை,திருவரங்கனை, காஞ்சி நகர் பேரருளாளனை தொழுதபடியே இருந்தான். கனவில் பேரருளாளப்பெருமாள் தோன்றினார். காஞ்சி நகருக்கு வரவும், அங்கு வைத்துள்ள புதையலை எடுத்துச் செல்லுமாறும் அருளினார். செய்தி அரசனுக்கு சொல்லப்பட, சோழ அமைச்சர் தொடர, வீரர்களுடன் திருமங்கை மன்னன் காஞ்சியை அடைந்தான். எல்லா இடங்களிலும் தேடியாயிற்று, புதையல் கிடைத்தபாடில்லை. திருமங்கை மன்னன் கனவில் மீண்டும் பெருமாள் தோன்றி, வேகநதி ஆற்றங்கரை அருகில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டார்.
அந்த இடத்திற்குச் சென்று தோண்ட, பொற்குவியல் கிடைத்தது. சோழ அரசிற்குச் செலுத்த வேண்டிய திறை செலுத்தப்பட்டது. சோழ அரசனுக்கு விபரம் முழுமையும் தெரிவிக்கப்பட்டது. ஆண்டவனே கனவில் தோன்றி அருள் செய்ததையறிந்த அரசர், திருமங்கை மன்னனின் பக்தியை உணர்ந்தார். ஆச்சர்யமடைந்தார். செலுத்திய திறையை திரும்ப திருமங்கை மன்னனிடமே அளிக்க உத்தரவிட்டார். மிகுந்த பொருட்களுடன் திருமங்கை மன்னன் நாடு திரும்பினான்.
குமுதவல்லிக்கு அவனைப் பார்த்த வுடன், ‘‘எனக்கு மிகுந்த குற்ற உணர்வு மேலிடுகிறது. போதும். நாராயணன் அடியவர்களுக்கு நாம் செய்து வந்த உணவிடுதல் போதும். உங்களை உருக்கிக்கொண்டு தாங்கள் என் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுத்தது போதும்.’’‘குமுதவல்லி! நாம் செய்கின்ற பணி நாராயணின் பணி. நீ, நான் ஒரு கருவி அவ்வளவே! நீதானே இப்படி அடிக்கடி கூறுவாய்.’’அடியவர்களுக்கு அமுது படையல் தொடர்ந்தது. சில மாதங்களில் பொருட்கள் தீர்ந்தன. திருமங்கை மன்னன் கையேந்தி நின்றான். எந்த ஒரு வழியும் புலப்படவில்லை. தவித்தான். புலம்பினான். இறுதியில் அவனுக்கு ஒரு எண்ணம் உதித்தது.
‘குமுதவல்லி! தற்பொழுது எனக்கு இருக்கும் ஒரே வழி கொள்ளையடிப்பது ஒன்றுதான்.’’‘‘ஏன் இப்படியொரு முடிவு? உங்களைத் தவறிழைக்கத் தூண்டுவது எனக்குத் தாங்கள் கொடுத்த வாக்குதான் என்றால், போதும். நாம் நிறுத்திவிடலாம். நம் நாராயணன், இவ்வளவு காலம் நம்மை இந்த அறப் பணியைச் செய்ய வைத்தான். இன்று இது போதும் என்று முடிவெடுத்துவிட்டான். கொள்ளையடித்துத்தான் செய்யவேண்டுமெனில் நாராயணனே ஒப்ப மாட்டான்.’’‘‘என்னை இயக்குபவன் அவன்தானே? அவனுக்குத் தெரியும் எல்லாமும். அவன் பார்த்துக் கொள்வான்.
கவலையை விடு. மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். நாம், நாராயணின் கைகளில் வெறும் கருவியென்று! பாதை தவறோ சரியோ கவலையில்லை. எனக்கு என் இலக்குதான் முக்கியம். இப்பணியைத் துவக்குவதற்கு நீ காரணமாக இருக்கலாம். தொடர்வதற்கு அவன்தானே காரணம்.’’
‘‘நீங்கள் திருமங்கை நாட்டின் மன்னர். கள்வராக மாறுவது பொறுத்தமாகுமா?’’
‘‘பிறப்பால் நான் அரசன் அல்ல. இது எனக்கு ஒரு பொருட்டுமல்ல. நான் ஒரு வைணவன். எனக்கு வைணவ அடியார்களுக்கு அமுது படைப்பது ஒரு வேள்வி! திருவாராதனை! எல்லாவற்றிற்கும்மேல் என் உயிரானது. நீ பிரார்த்தனை செய்! அது போதும்.’’குமுதவல்லிக்கு அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. நாம ஜபம் செய்யத் துவங்கினாள்.திருமங்கை மன்னன் என்கிற பரகாலன் என்கிற நீலன் தன் நண்பர்கள் நால்வருடன் ஆடல்மா குதிரையில் புறப்பட்டான்.
மனதில் ஒரு நியதியை மட்டும் வைத்துக் கொண்டான். யாரையும் துன்புறுத்துவதில்லையென்றும், பெரிய தனவான்களை மட்டும் குறிவைத்து களவாடுவதென்றும் உறுதி பூண்டான். வழிப்பறி செய்த பொருட்கள் அனைத்தும் அறப்பணிக்கு மட்டுமே என்றானது. காலங்கள் உருண்டன. அடியவர்களின் வயிறும் வாயும் வாழ்த்தியது, ஆண்டவனுக்குக் கேட்காமலா இருந்திருக்கும்! நாராயணன் நெகிழ்ந்தான். தேவியை அழைத்தான். நாடகம் தயாரானது.திருவாலியிலே கோவில் கொண்டுள்ள வயலாளி மணவாளப் பெருமாள் மணமகனாகவும், அமிர்தவல்லித் தாயார் மணமகளாகவும், தேவர்கள் இரு வீட்டார்களாகவும் வடிவு கொண்டனர். ஏராளமான தங்க, வைர ஆபரணங்கள் அணிந்த வண்ணம், மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தார்கள்.
நீலன் தன் குழுமத்துடன் அவர்களைச் சுற்றி வளைத்தான். மிரட்டினான். அணி கலன்களைக் கழற்றித் தந்துவிட அதட்டினான். மணமகனின் உதட்டோரத்தில் தோன்றிய புன்னகையை மணமகள் மட்டுமே அறிந்திருந்தாள். எல்லோரும் தங்கள் ஆபரணங்களை நீலனின் பெரிய கோணியில் இட்டார்கள். மிஞ்சியிருந்தது மணமகனின் வலது காலில் அணிந்திருந்த சிலம்பு மட்டுமே!
‘‘இதை மட்டுமாவது விட்டு விடக்கூடாதா?’’
‘‘ஏன்? உனக்கு உன் உயிரைவிட இது முக்கியமா?’’ சொல்லியபடியே நீலன் குனிந்தான். மணமகனின் பாதம் தொட்டான். மேனி சிலிர்த்ததை அவன் உணரவில்லை. கையால் கழட்ட முயற்சித்தான். முடியவில்லை. தன் பல்லினால் கடித்தான். இழுத்தான். அவனுடைய மிடுக்கான தோரணையை நாராயணன் ரசித்தான்.‘‘நம் கலியனோ!’’அந்த வார்த்தையைக் கேட்டவுடன் நீலன் ஒரு கணம் திகைத்தான். மும்முரமாக கழட்டிய சிலம்பை மூட்டையில் இட்டான். பின் அந்த மூட்டையைத் தூக்க முற்பட்டான். அவனால் நகர்த்தக் கூட முடியவில்லை. எவ்வளவோ பிரயத்தனப்பட்டபோதும் அசையவில்லை.
‘‘நீ ஏதோ மந்திரம் சொல்லி மாயாஜாலம் செய்கிறாயா? என்னால் அசைக்க முடியாமல் நீதான் செய்து விட்டாயா?’’‘‘மந்திரமா? நானா? எங்கள் பொருட்களை நீ எடுத்துச் செல்லப்போகிறாய். இருந்தும் உன்னுடைய மிடுக்கைக் கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன். என்னை நம்பு!’’‘இல்லையில்லை. உன் பாதம் தொட்டால் ஏதோ ஆகிறது. உன் கண்கள், என்னை, உன்னையே பார்த்துக் கொண்டிருக்கச் செய்கிறது. உன் உதடுகள் ஏதோ மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மாயனே! அந்த மந்திரத்தைச் சொல்! என்னால் இந்தப் பாரத்தை நகர்த்தக்கூட முடியவில்லை.’’
‘‘இங்கே, இந்தக் கூட்டத்தின் முன்னே எப்படி மந்திரத்தைச் சொல்லிக் கொடுப்பது? அதோ அந்த அரச மரத்தின் அருகில் செல்வோம். வா!’’நீலனுக்கு அவன் சொல்வதைக் கேட்க வேண்டும்போல இருந்தது. மணமகன், நீலனின் வலது கரத்தைப் பற்றினான். அரச மரத்தினடிக்கு அழைத்துச் சென்றான். நீலனுக்கு, அந்தக் கரத்தின் அழுத்தம், அவனை தெய்வீக உணர்விற்கு இட்டுச் சென்றது. அவனால் அந்த உணர்வை வகைப்படுத்தத் தெரியவில்லை. திகைப்பு மேலோங்க மணமகனின் கண்களைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
நீலனின் தோள்களைப் பற்றித் தன்மீது சாய்த்துக்கொண்டு, அவனின் வலது காதில், “ஓம் நமோ நாராயணாய” எனும் எட்டெழுத்து மந்திரத்தைச் சொன்ன அந்தப் பொழுதில் நீலன் என்கிற பரகாலன் என்கிற திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாராக மாறிப் போனார். நாராயணனும், பிராட்டியாரும் தோன்றி அவரையும் குமுதவல்லியையும் ஆசிர்வதித்தார்கள்.
அவரின் முதல் பாசுரம் பிறந்தது.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடி யிளையவர் தம்மோ டவர்தரும் கலவியே கருதி. ஓடினே னோடி யுய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராய ணாவெனும் நாமம்,பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு பாசுரத்தைச் சொல்லச் சொல்ல மனது விம்மியது. தனக்கு ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவத்தை இயற்றும் பாக்கியத்தை அருளிய நாராயணனை நன்றியுடன் தொழுதார். திருமங்கை ஆழ்வார் பற்றி, தான் இயற்றும் பேறு பெற்றமை குறித்து நெகிழ்ந்தார். பின், தொடர்ந்தார்.
“யாருக்குமே கிடைக்காத பெரும்பேறு திருமங்கை ஆழ்வாருக்குக் கிட்டியுள்ளது. நாராயணனே பஞ்ச சம்ஸ்காரம் செய்விப்பதும், மந்திரம்அருளுவதும் அவருக்கு மட்டுமே வாய்த்தது!ஆழ்வார் நமது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பெரும்பாலான பாசுரங்களை இயற்றியவர். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திரு எழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என ஆயிரத்து இருநூற்று ஐம்பத்தி மூன்று பாசுரங்கள் அருளியுள்ளார். அவருடைய பாசுரங் களின் அடிநாதமாக இருப்பது நாராயணன் நாமத்தைக் கண்டு கொண்டதுதான்.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு
கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
– என்ற ஒற்றைப் பாசுரம் நமக்கெல்லாம் போதும். நாமம் சொல்வதொன்றே நம்மை இம்மையிலும் மறுமையிலும் காக்கும். எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று மங்களாசாசனம் செய்வித்த ஆழ்வார் இவரென்றே சொல்லலாம்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடைய வாழ்நாள்
எல்லாமுமே அவருக்கு நாராயணணனே… என்று வாழ்ந்தவர்.
நாம் அவரடி தொழுவோம். நலம் பெறுவோம்.
கோதண்டராமன்
