சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று சொல்லப்படும் கவுண்டமணி, தனது 3 தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த 3 சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அவரது தங்கைகள், தாங்கள் காதலித்து வருபவர்களை அண்ணன் சம்மதத்துடன் திருமணம் செய்யும் எண்ணத்தில், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த தங்களின் காதலர்களை சகோதரர்களாக நடிக்க வைக்கின்றனர். அரசியல், குடும்ப விளையாட்டின் விளைவுகள் என்ன என்பது மீதி கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்துள்ள கவுண்டமணியின் ‘கவுண்டர்’ டயலாக்குகள் சிரிக்க வைக்கின்றன.
அவருடன் யோகி பாபுவும் காமெடி செய்திருக்கிறார். வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கமுத்து, வையாபுரி, முத்துக்காளை, டிஆர்எஸ், கூல் சுரேஷ், சென்ராயன் உள்பட, மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் அவரவருக்கான வேலையை கச்சிதமாகச் செய்துள்ளது. எஸ்.ஏ.காத்தவராயன் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. எழுதி இயக்கி நடித்துள்ள சாய் ராஜகோபால், கவுண்டமணியின் வசனங்களால் அரசியலை ஓரளவு நையாண்டி செய்திருக்கிறார். இது பல படங்களில் வந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணியை அவரது ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிக்கலாம்.
