சென்னை: சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிக்க, சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள ‘2K லவ் ஸ்டோரி’ படம், வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் தனஞ்செயன் வெளியிடுகிறார். வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றி சுசீந்திரன் கூறியதாவது:
நான் இயக்கிய முதல் படம் போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. வெட்டிங் போட்டோகிராபியில் ஈடுபட்ட இளைஞர், இளைஞிகளின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘இந்த உலகம் பார்ப்பது போல் ஏன் எங்களை வாழச் சொல்கிறீர்கள்? நாங்கள் பிரெண்ட்ஸ்’ என்று சொல்லும் ஹீரோ, ‘பல வருடங்களாக உன்னுடன் பழகுகிறேன். உன் மீது அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை’ என்றும் சொல்கிறார். நட்புக்கும் கற்பு உண்டு என்பது மையக்கரு. இது 2கே கிட்ஸ்களுக்கு அறிவுரை சொல்லும் படம் கிடையாது. அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
