×

தொடர் எதிர்ப்பு எதிரொலி: சன்னியாசியான நடிகை விரட்டியடிப்பு

லக்னோ: மகா கும்பமேளாவில் சன்னியாசம் பெற்ற நடிகை மம்தா குல்கர்னி, திடீரென மகாமண்டலேஷ்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை சேர்த்துக் கொண்ட சன்னியாசியும் நீக்கப்பட்டார். பாலிவுட் மற்றும் தமிழ் உள்பட பிற மொழிகளில் நடித்தநடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். அவர் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்டார். திடீரென கும்பமேளாவில் தன்னை சந்நியாசியாக மாற்றிக்கொண்ட மம்தா குல்கர்னி, தனது பெயரை  யாமை மம்தா நந்தகிரி என்று மாற்றிக்கொண்டார். சந்நியாசிகளை உருவாக்கும் கின்னர் அகாரா ஆன்மீக மடத்தில் சேர்ந்த அவர், அந்த மடத்தில் மகாமண்டலேஷ்வராக மாற்றப்பட்டார்.

அவருக்கு மகாமண்டலேஷ்வர் பதவியை லட்சுமி நாராயண் திரிபாதி வழங்கினார். இதுவரை உலக வாழ்க்கையில் மூழ்கியிருந்த மம்தா குல்கர்னி திடீரென மகாமண்டலேஷ்வராக ஆக்கப்பட்டதற்கு, கின்னர் அகாரா மடத்தில் இருக்கும் மற்ற சந்நியாசிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதுதொடர்பாக அந்த மடத்தின் தலைவர் ரிஷி அஜய் தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மம்தா குல்கர்னி கின்னர் அகாரா மடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு அவரை எனக்கு தெரியாமல் கின்னர் அகாராவில் சேர்த்துக்கொண்டதற்காக மகாமண்டலேஷ்வர் லட்சுமி நாராயண் திரிபாதியும் கின்னர் அகாராவில் இருந்து நீக்கப்படுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Lucknow ,Mamta Kulkarni ,sannyasin ,Maha Kumbh Mela ,Mahamandaleshwar ,Bollywood ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்