×

மோதல் முற்றுகிறதா? பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுனின் மாமனார் வீட்டை இடிக்க முடிவு: தெலங்கானா அரசு நடவடிக்கை

ஐதராபாத்: ஐதராபாத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக நடிகரும், தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணாவின் வீட்டிற்கும் அல்லு அர்ஜுனின் மாமனார் வீட்டிற்கும் அதிகாரிகள் அடையாளக் குறி இட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள கேபிஆர் பூங்கா சுற்றுவட்டாரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கத் தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45இல் உள்ள பாலகிருஷ்ணாவின் வீட்டிற்கும், அல்லு அர்ஜுனின் மாமனார் கே.சந்திரசேகர் ரெட்டி வீட்டின் சுற்றுச்சுவருக்கும் அதிகாரிகள் அடையாளக் குறி இட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணாவின் வீட்டிற்கு சுமார் ஆறு அடி வரை அடையாளக் குறி இடப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ‘கேபிஆர் பூங்கா சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பல பிரபலங்களின் இடங்கள் கையகப்படுத்தப்படும். சாலை விரிவாக்கத்திற்காக 87 சொத்துக்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் யாரையும் குறித்து வைத்து இது நடக்கவில்லை. ஜூப்ளி ஹில்ஸ் மகாராஜா அகர்சென் சந்திப்பிலிருந்து சோதனைச் சாவடி வரை கேபிஆர் பூங்கா எல்லையோர சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள ஆறு சந்திப்புகளின் மேம்பாட்டுப் பணிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், பணிகளைத் தொடர அரசு உறுதியாக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரையும் சமாதானப்படுத்தி நிலம் கையகப்படுத்தப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடுகளில் அல்லு அர்ஜுனின் மாமனார் வீடும் இடம்பெற்றுள்ளது, சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுனுக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் மோதல் வெடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இப்போது அவரை மாமனாரை டார்கெட் செய்வதாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags : Balakrishna ,Allu Arjun ,Telangana government ,Hyderabad ,Telugu Desam Party ,MLA ,KPR Park ,Hyderabad, Telangana ,
× RELATED திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண்...