ஐதராபாத்: திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். ஐதராபாத்தில் சத்யா திரையரங்கில் புஷ்பா 2 சிறப்பு காட்சியை பார்க்க வந்த பெண், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். வழக்கில் கைதான அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளியேவந்த நிலையில், போலீஸ் சம்மன் அனுப்பியதை அடுத்து விசாரணைக்கு ஆஜராகிறார். விசாரணைக்கு ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இப்படம் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்தார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். இந்த விசாரணை 1 மணி நேரம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கு; நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜர்! appeared first on Dinakaran.