×

காஞ்சிபுரம் காமாட்சி - தங்க தல கருவறை விமானம்

காஞ்சிபுரத்திலுள்ள ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் எல்லோரும், அந்தந்த கோயில் உற்சவத்தின்போது  காமாட்சியம்மன் ஆலயத்தை வலம் வந்து செல்வது வழக்கம்.இக்கோயிலின் முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரரின் தியானம் செய்யும்  நிலையில் உள்ள சிலையை தனி சந்நதி கருவறையில் தரிசிக்கலாம். காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. காமாட்சியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்ரத்தில் ‘வசின்யாதி வாக்தேவதைகள்’ எட்டு பேரும் அருள்கின்றனர். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன.  

அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்பதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. காமாட்சியின் கோஷ்டத்தில் வாராஹி, அரூபலட்சுமி, சௌந்தர்ய லட்சுமி, கள்ளவாரணப் பெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  கள்ளவாரணர் 108 திவ்ய தேச பெருமாள்களில் ஒருவர். வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. மேற்கு, வடக்கு கோபுரங்களின் இடையே உள்ள கனு மண்டபத்தில் காமாட்சிதேவி பொங்கலுக்கு முந்தைய பத்து நாட்கள் எழுந்தருள்வாள். பொங்கலன்று அந்த மண்டபத்தை காய்கனிகளால் அலங்கரித்து பாத வடிவில் காணப்படும் பங்காரு காமாட்சிக்கு முழுத் தேங்காய் நிவேதனம் நடக்கும். காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும் தரிசிக்கலாம்.

பிக்ஷத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி, ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால், நம் வாழ்வில் உணவுப் பஞ்சம் வராது என்கிறார்கள். இத்தலத்தில் மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி ஆகியோர் அருள்கின்றனர். கனிவான தன் கண் வீச்சிலேயே பக்தர்களைக் காப்பதால், அன்னை தன் கரங்களால் அபய-வரத முத்திரை காட்டவில்லை. ஈசன் அளித்த இரு நெல்மணிகளைக் கொண்டு 32அறங்களை வளர்த்ததால் காமாட்சி அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படுகிறாள். காமாட்சியை கருவறை அருகில் சென்று வழிபட விரும்பும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று. மூல கருவறையில் காமாட்சி அமர்ந்த நிலையில் அருள, உற்சவ காமாட்சி நின்ற நிலையில் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதியோடு தரிசனம் அளிக்கிறாள்.

இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம். ஆதிசங்கரருக்கே இத்தலத்தில் முதல் மரியாதை. அவரது அனுமதி பெற்றே அம்பாள் வீதியுலா வருவாள். அப்போது அம்பாளை நோக்கியபடியே உலா வருவார் ஆதிசங்கரர். அம்பிகையின் கருவறை விமானமும், ஆதிசங்கரரின் விமானமும் தங்கத்தால் ஆனவை. காமாட்சியின் கருவறை விமானம் ராஜகோபுர அமைப்பில் உள்ளது இத்தல அற்புதமாகும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். அதே சமயம் நூற்றுக்கணக்கான பக்த ஜோடிகளுக்கும் திருமணமும் நடக்கும்.

பிறவியிலேயே பேச்சிழந்த மூகன், காமாட்சியின் அருளால் பேசும் சக்தியைப் பெற்று மூக பஞ்சசதீ எனும் 500 பாடல்களைப் பாடியருளிய தலம் இது. முற்பிறவியில் காளிதாசன் போஜமன்னன் சபையில் அருவமாக பேசிய அம்பிகையை ஒருமையில் அழைக்க அதனால் அம்பிகையினால் ஊமையாகும்படி சாபம் பெற்றான். தவறுக்கு மன்னிப்பு கேட்ட காளிதாசனே மறுபிறவியில் ஊமையாகப் பிறந்து காஞ்சி காமாட்சியின் தாம்பூல உச்சிஷ்டத்தை பெற்று கவி பாடும் திறன் பெற்று காமாட்சியின் மேல் பாடிய அற்புதத்துதி அது. அதில் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் காஞ்சி என்ற பதமோ காமாட்சி என்ற பதமோ, காமகோடி என்ற பதமோ இடம் பெற்றுள்ள பெருமையையும் பெற்றது.

Tags : Kanchipuram Kamakshi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?