×

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ படம் பரவலான வரவேற்பை பெற்றது. ஒரு தாதாவிற்கும், சினிமா இயக்குனருக்கும் இடையிலான உறவை, உரசலை சொன்னது அப்படம். தற்போது அதன் இரண்டாம் பாகமாக இந்த படம் வந்திருக்கிறது. இந்த பாகத்தின் மூலக் கதையும் அதுதான். ஆனால் களம் வேறு, காட்சிகள் வேறு. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வாகி போஸ்டிங்கிற்காக காத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா திடீரென ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு செல்கிறார். அரசியல்வாதிகளுக்கும், சினிமா ஆசையில் இருக்கும் நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் மதுரை தாதா ராகவா லாரன்சை போட்டுத்தள்ளினால் விடுதலையும், இழந்த போலீஸ் வேலையும் கிடைக்கும் என்கிற அசைன்மென்ட் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைக்கிறது. சினிமா ஆசையில் இருக்கும் ராகவா லாரன்சின் கேங்கிற்குள் இயக்குனராக நுழைகிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் படம் எடுத்தாரா? லாரன்சை போட்டுத் தள்ளினாரா? என்பது மீதி கதை.

மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்த ராகவா லாரன்ஸ் மதுரை தாதாவானது எப்படி? ஊரே கொண்டாடும் ஹீரோவாக அவர் மாறியது எப்படி? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது திரைக்கதை. சினிமா எப்படி ஒரு கெட்டவனை நல்வனாக்குகிறது, நாட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறது என்பதோடு, அரசியல்வாதிகளின் பேராசைக்காக இயற்கை வளங்கள் எப்படி கொள்ளை அடிக்கப்படுகிறது, மலைவாழ் மக்கள் எப்படி நசுக்கப்படுகிறார்கள் என்பதையும் பேசுகிறது படம். ரத்தத்தை கண்டாலே மயங்கி விழும் எஸ்.ஜே.சூர்யா, போலீஸ் வேலைக்கு தேர்வானது எப்படி? ஒரு முதல்வர் தன் படை பட்டாளத்துடன் காட்டுக்குள் வந்து சென்றதை எப்படி முழுசாக மறைக்க முடியும்? ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து வந்த எஸ்.ஜே.சூர்யா இரண்டே காட்சிகளில் ஒரு காட்டுவாசி பெண்ணை எப்படி மணந்து கொள்ள முடியும்? சர்வ அதிகாரமும் படைத்த ஒரு போலீஸ் அதிகாரியாக எப்படி இருக்க முடியும்? என படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள். பின்பகுதி காட்சிகளும், அதற்கான உழைப்பும் அதை மறக்கடிக்கிறது.

சந்தன கடத்தல் வீரப்பன், சினிமா ஆசையில் இருக்கும் நடிகர்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுடன் அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான தொடர்பு போன்ற சமாச்சரங்களையும் நாசுக்காக இணைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ராகவா லாரன்சும் எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பில் போட்டி போட்டு மிரட்டி இருக்கிறார்கள். இருவருக்கும் சமமாக நிற்கிறார் ராகவா லாரன்ஸ் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், திருவின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. என்றாலும் பழைய ஜிகர்தண்டாவில் இருந்த அந்த சுவை இதில் மிஸ்சிங்.

 

The post ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthik Subbaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சாமானியன் விமர்சனம்