×

சிரமங்களை களைவார் சிதாநந்தீஸ்வரர்

அசுரர்களின் வாரிசுகளான தஞ்சன், தாரகன் இருவரும் தற்போதைய தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வந்தனர். அவர்கள் சிவனை வேண்டி கடும் தவம் புரிந்தனர். அவர்களின் தவ வலிமையை கண்டு, அவர்கள் முன் தோன்றி ஈசன், என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சாகா வரம் வேண்டும் என்றனர் அசுரர்கள். யாருமே சாகாமல் இருக்க முடியாது. பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம் என்றார் ஈசன். உடனே அசுரர்கள், அப்படியானால் கோடி கரங்கள் கொண்ட ஒரு பெண்ணால் தான் எங்களுக்கு மரணம் நேர வேண்டும். எங்கள் மரணத்திற்கு பிறகு, இறைவா, தாங்களே வந்து எங்கள் சிதைக்கு தீ மூட்ட வேண்டும். அந்த சிதையில் இறைவன் நடனம் புரிய வேண்டும். அப்படியாவது தங்கள் பாதம் எங்கள் சிதை மீது பட வேண்டும். கணலில் கருகி மடிந்த  பின், எங்களது உடல் எலும்புகளை இறைவனே நீரே நீரில் கரைத்து இறுதி காரியங்களை செய்ய வேண்டும் என்று வேண்டினர். சிவனும் அப்படியே ஆகட்டும் என்று கூறினார்.

வரங்களை பெற்ற தஞ்சனும், தாரகனும் அளவில்லா ஆனந்தம் கொண்டனர். காரணம் கோடி கரங்களோடு எந்த ஊரில் பெண் பிறக்கப்போகிறாள். இறைவன் வந்து இறுதி காரியங்கள் செய்யப்போகிறார். இதுவெல்லாம் நிச்சயமாக நடக்காது. அப்படியானால் நமக்கு இறப்பு என்பது கிடையாது. என்றெண்ணினர். மக்களை கொடுஞ் செயல்களால் துன்புறுத்தி கடுந்துயரத்திற்கு உள்ளாக்கினர். இதிலிருந்து மக்களை காக்க ஈசன் வரவேண்டும் என்று தஞ்சாவூர் அருகே வடவாற்றங்கரையில் சிலாத  முனிவர் என்பவர் யாகம் நடத்திக்கொண்டிருந்தார். சிலாத முனிவரின் யாகத்தை தடுத்து நிறுத்தி அதைக்கலைத்துவிட தஞ்சன், தாரகன் இரு அரக்கர்களும் இடையூறு செய்தனர். சிலாத முனிவரின் யாகத்தை சிதைக்க மண்மழையை (மண்மாரி) பொழியச் செய்தார்கள். இதுபோன்று இன்னும் ஏராளமான தொல்லைகளை கொடுத்தார்கள்.

சிலாத முனிவர் தனது யாகம் வெற்றிபெற, ஆதிபரா சக்தியின் அம்சமான மகா கெளரியான ஆனந்தவல்லியிடம் முறையிட்டார். அன்னை ஆனந்தவல்லி கோடிகரத்துடன் யாகத்தீயில் இருந்து எழுந்து வடவாற்றங்கரை மண் எடுத்து சக்கரம் செய்தாள். பின்னர், அந்த சக்கரத்தைக் கொண்டு தஞ்சன், தாரகன் ஆகிய இரண்டு அரக்கர்களையும் அழித்தாள். அரக்கர்கள் இருவரும் சிவ வழிபாடு செய்து சிவ பக்தர்களாக இருந்ததால், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த அரக்கர்களின் உடல்களுக்கு சிவபெருமான், இறுதிக் காரியங்களை செய்ய முன்வந்தார். ஆற்றங்கரையில் காரியங்களை செய்து அவர்களுக்கு முக்தியும் அருளினார். அரக்கர்களின் இறுதிக் காரியத்திற்கு பின் அவர்களது எலும்புகளை ஆற்றில் கரைத்த போது அவை பூக்களாகவும், முத்துக்களாகவும் உருமாரி மிதந்ததால் இப்பகுதியில் பாயும் ஆறு மணிமுத்தாறு என்று அழைக்கப்படுகிறது.

சிலாத முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க இறைவனும், சக்தியும் இவ்விடம் தங்கி அருள் புரிந்தனர். இறக்கும் தருவாயில் தஞ்சன் தனது பெயரால் இவ்வூர் விளங்க வேண்டும் என்று கூறினான். அதன்படி தஞ்சன் ஆண்ட ஊர் என்பதே தஞ்சாவூர் என்றாயிற்று என்றும் கூறப்படுகிறது. சிலாத முனிவருக்கு கிடைத்த அமுதம் பட்டு உருவான குளம் ஒன்று கோயிலுக்கு அருகில் இருக்கிறது. அமுதம் பட்டு உருவானதால் இதற்கு அமுத புஷ்கரணி என்று பெயர். அமுத புஷ்கரணியை பார்த்து அமர்ந்திருப்பதால் அம்பாளுக்கு அமுத மொழியாள் என்று பெயர். அசுரர்களின் உடல்களுக்கு சிதை மூட்டிய காரணத்தினால் இறைவனுக்கு சிதாநந்தீஸ்வரர் என்று பெயர். சிதாநந்தீஸ்வரர் என்றால் சிதையில் ஆடும் பெருமான் என்று பொருள். கொங்கண சித்தரின் குருவான ரோமாரிஷி சமாதி அமைந்த இடம் ஆலயத்தின் ஈசான மூலையில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை அருகில் உள்ள வடவாற்றங்கரைக்கு அடுத்துள்ளது பூக்குளம். இங்கு தான் அமைந்துள்ளது சிதாநந்தீஸ்வரர் திருக்கோவில். இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு சிரமங்கள் களையும், துன்பங்களும், துயரங்களும் விலகும். அகாலமரணம் ஏற்படாது என்பதும் ஐதீகம்.

டாக்டர் டி.சூரியகுமார்

Tags :
× RELATED சுந்தர வேடம்