- எடப்பாடி
- அண்ணாமலை
- செங்கோட்டையன்
- மேட்டுப்பாளையம்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரசாரத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று துவக்கினார். இதற்காக, நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்த அவர், அங்குள்ள வனப்பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, தேக்கப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களை சந்தித்து, கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். இன்னும் விவசாயிகளுக்கு நிறைய செய்ய வேண்டும். அதற்கு என்னிடம் பல திட்டங்கள் இருக்கிறது. அதை இப்போதே சொல்ல முடியாது. சொன்னால் வெளியே கசிந்துவிடும் என்றார். அப்போது கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பவானி நதிநீர் பாதுகாப்பு குழு நிர்வாகியான விவசாயி அரங்கசாமி, 60 ஆண்டு காலமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2019ல் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்த திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி பேசினார். அப்போது, குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசுக்கு அனுப்பிய போது அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்றார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாய சங்கங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். வேறுவழியின்றி அதிமுக விவசாய அணி நிர்வாகிகளை அழைத்து வந்து கூட்டத்தை காண்பித்தனர். இதை உறுதிபடுத்தும் வகையில், எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு கவர்களில் எடப்பாடியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தினார்.
கோபியில் உள்ள தனது வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மற்ற கூட்டணி கட்சியினர் நேற்று பங்கேற்கவில்லை. பாஜ சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அமைச்சர் எல். முருகன், மேலிட பொறுப்பாளர் அர்விந்த் மேனன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர். இதே போல பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஜெகன்மூர்த்தி ஆகிய கூட்டணி கட்சி தலைவர் களுக்கு அழைப்பே அனுப்பவில்லை. எனவே அவர்கள் யாரும் கலந்துகொள்ள வில்லை. கூட்டணி கட்சிகள் உறுதியாகாமல், தலைவர் கள் யாரும் பங்கேற்காத நிலையில், கூட்டணி உறுதியான பாஜவின் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர் கள் புறக்கணித்தது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலையில் தான் எடப்பாடியின் பிரசாரம் தொடங்கியுள்ளது. இன்று 2வது நாளாக கோவை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது தேர்தல் சுற்றுப்பயண பிரசாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* அதிமுக நிர்வாகி உள்பட 4 பேரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்
விவசாயிகளிடம் கலந்துரையாடல் கூட்டத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார். அப்போது அவரை சந்திக்க காரமடை ஒன்றிய அதிமுக பொருளாளரும், தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவருமான தங்கராஜ் வந்தார். அப்போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் ரூ.2 லட்சம் வைத்திருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த 2 லட்சம் ரூபாயை மர்ம நபர் பிளேடால் வெட்டி எடுக்க முயன்றார். ஆனால் அவரிடம் 1 லட்சம் ரூபாய் சிக்கியது. ரூ.1 லட்சத்தை எடுத்த மர்ம நபர் நொடிப்பொழுதில் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.
இதேபோல் நெல்லித்துறையை சேர்ந்த அதிமுக நிர்வாகி மற்றும், வாழைக்காய் வியாபாரி ஆனந்த் என்பவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்தும் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் செய்யப்பட்டது. அபு என்பவரிடம் ரூ.2500ம், உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவரிடம் ரூ.5000 என மொத்தம் 4 பேரிடம் ரூ.2 லட்சத்து 7500 ரூபாயை பிக் பாக்கெட் அடித்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பிரச்சார கூட்டத்தில் 4 பேரிடம் ஜேப்படி செய்த சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
The post சுற்றுப்பயணம் தொடங்கினார் எடப்பாடி கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பில்லை: அண்ணாமலை, செங்கோட்டையன் புறக்கணிப்பு appeared first on Dinakaran.
