சென்னை: மூலதன செலவுக்கு மட்டுமே அரசு கடன் வாங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலிலும், அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலிலும் தொடர்ந்து 4ம் ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ.9 லட்சத்து 55,690 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுவதும், மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பில் பெரிய மாநிலமுமான உத்தரபிரதேசம் கூட அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் ரூ.8.57 லட்சம் கோடி கடனுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக கருதப்படும் மகாராஷ்டிரா ரூ.8.12 லட்சம் கோடி கடனுடன் மூன்றாவது இடத்திலும் தான் உள்ளன. அதிலும், தமிழகத்திற்கும், எந்த ஒரு மாநில அரசும் கடன் வாங்காமல் நிர்வாகம் செய்ய முடியாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அரசின் செலவுகளையும், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளையும் வருவாய் வரவுகளைக் கொண்டே சமாளித்து விட்டு, மூலதன செலவுகளுக்காக மட்டுமே கடன் வாங்குவது தான் நல்ல நிதி நிர்வாகத்திற்கான அடையாளம் ஆகும். ஆனால், மூலதனச் செலவை விட 3 மடங்குக்கும் கூடுதலாக கடன் வாங்கி கடன் சுமையில் அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
