சென்னை: பாஜவின் புதிய தேசிய தலைவராக பதவியேற்றுள்ள நிதின் நபின் முதன் முறையாக டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமானதால் பாஜ தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பாஜ தேசிய தலைவராக நிதின் நபின் கடந்த 15ம் தேதி புதிதாக பொறுப்பேற்றார். இந்த நிலையில், நிதின் நபின் முதன்முறையாக, நேற்று மதியம் டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அவர் முதல்முறையாக சென்னை வந்ததால் தமிழ்நாடு பாஜ சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று காலை 9.50 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வருவதாக இருந்தது. இதையடுத்து ஏராளமான பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவு நேற்று காலை 9 மணியிலிருந்தே சென்னை விமான நிலையத்தில் வந்து குவிய தொடங்கினர். ஆனால் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, விமானம் தாமதமாக, நேற்று மதியம் தான் சென்னை வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பாஜவினர், சென்னை விமான நிலையத்திலேயே 3 மணி நேரத்திற்கு மேலாக குவிந்திருந்தனர். அவர்கள் வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மதியம், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியில் இருந்து சென்னை வந்தது. அதில் வந்த நிதின் நபினை தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் விமான நிலையத்தின் உள்பகுதிக்கு சென்று வரவேற்று, வெளியில் அழைத்து வந்தனர். வெளியில் ஏராளமான பாஜ தொண்டர்கள் திரண்டு இருந்து வரவேற்பு அளித்தனர். திறந்த வாகனத்தில், சென்னை விமான நிலையத்தில் இருந்து பேரணியாக அழைத்து சென்று, வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு நிதின் நபின், சாலை மார்க்கமாக, விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். பாஜவினர் தங்களது வாகனங்களை ஆங்காங்கே டெர்மினல் ஒன்று வருகை பகுதி அருகே நிறுத்தினர். இதனால் மற்ற விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அந்த பயணிகளை அழைத்துச் செல்ல வந்த உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். ஏராளமான வாகனங்களும் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு இருந்ததால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
