சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டின் வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஐயப்பாட்டை எழுப்புகிறது. சட்டமன்ற தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து தீவிரமாக கள ஆய்வு செய்யும் கடமையை மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
