×

செங்கோட்டையனும், விஜய்யும் அய்யோ பாவம்: நயினார் கலாய்

திருக்கோவிலூர்: செங்கோட்டையனும், விஜய்யும் அய்யோ பாவம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பிரசார கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் இறந்து போனவர்கள் மற்றும் இடமாறியவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். உயிரோடு உள்ளவர்கள் நீக்கப்படவில்லை’’ என்றார். திமுகவுக்கும், தவெக-வுக்கும் தான் போட்டி என விஜய் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘‘ஐயோ பாவம். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும். இதுவரை எந்த தேர்தலிலும் தம்பி (விஜய்) போட்டியிடவில்லை. அண்ணன் ஒருவர் (செங்கோட்டையன்) சேர்ந்துள்ளார். அவர் சேர்ந்ததால் அம்மாவுடன் இருந்தது போல் நினைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார்’’ என்றார். அடுத்த மாதம் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் நிறைய பேர் தவெகவில் இணைவார்கள் என்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘செங்கோட்டையன் அண்ணன் பாவம். வேற வழியில்லை’’ என்றார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜ இருந்தது, தற்போது அந்த இடத்துக்கு விஜய் வந்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அப்படி நினைக்க வேண்டிய அவசியம் கிடையாது’’ என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

* ‘வண்டில ஆடிட்டு
பாடிட்டு வர்றாங்க…’
கண்டாச்சிபுரத்தில் நடந்த வேன் பிரசாரத்தில், ‘இன்று மக்கள் தெளிவான முடிவு எடுத்துவிட்டார்கள். சில பேர் வண்டில ஆடிட்டு வர்றாங்க பாட்டு பாடிட்டு வராங்க. மாஸ் என்கிறாங்க, காசு என்கிறாங்க… ஆனா நம்ம பெரிய பிக்பாஸ் என்று அவங்களுக்கு தெரியாது’ என மறைமுகமாக தவெக தலைவர் விஜய்யை சாடி நயினார் நாகேந்திரன் பேசினார்.

* ‘மோடி, அமித்ஷா இருக்கும் வரை நீதிபதியை நீக்க முடியாது’
‘நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடாமல் செய்கிறார்கள். நீதிபதியை நீக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கையெழுத்து போட்டுள்ளார்கள். மோடி, அமித்ஷா இருக்கும் வரை அவரை நீக்க முடியாது. நீதிபதியை நீக்கும் அதிகாரம் எம்பிக்களுக்கு யார் கொடுத்தது’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags : Sengottaiyan ,Vijay ,Nainar Kalai ,Thirukovilur ,Nainar Nagendran ,BJP ,state president ,Tamil Nadu ,Thalanimira Tamilan ,journey campaign ,Aragandanallur, Villupuram district ,
× RELATED தேசிய கிராமப்புற வேலை உறுதி...