×

பாஜ கூட்டணி கட்சிகளை ஓட விட வேண்டும் முன்பு தேர்தலில் முறைகேடு இப்போது தேர்தலே முறைகேடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

நாகப்பட்டினம்: முன்பு எல்லாம் தேர்தலில் முறைகேடு செய்தார்கள். தற்போது பாஜவினர் தேர்தலையே முறைகேடாக செய்கிறார்கள். பாஜ கூட்டணி கட்சிகளை ஓட விட வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். நாகப்பட்டினம் தளபதி அறிவாலயத்தில் திமுக ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, பாக நிலை புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு கட்சிக்கும் வரலாறு உண்டு. சிலர் வரலாறு இல்லாமல் கட்சி தொடங்கி உள்ளனர்.

நாட்டில் பல கட்சிகளுக்கு பூத் கமிட்டியே கிடையாது. நாடே பாராட்டும் வகையில் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறது. இதனால் மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாத பாஜ பல்வேறு வழிகளில் தமிழக அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. முன்பு எல்லாம் தேர்தலில் முறைகேடு செய்தார்கள். தற்போது பாஜவினர் தேர்தலையே முறைகேடாக செய்து வருகிறார்கள். அவர்கள் வடநாட்டில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைய முடியாது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்வது போல தமிழ்நாடு என்னைக்குமே டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் போல, எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் லேப்டாப் திட்டத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது வேடிக்கையாக இருக்கிறது. கல்லூரி மாணவ, மாணவிகளின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் ஏ.ஐ.தொழில்நுட்பத்துடன் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. பாஜ பழைய அடிமைகள் பத்தாது என்று, புதிய அடிமைகளை சேர்த்து உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி கட்சிகளை ஓட விட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவியில் அமர வைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* தூய்மை பணியாளர்களிடம் நலம் விசாரித்த துணை முதல்வர்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை 8 மணியளவில் விடுதியில் இருந்து புறப்பட்ட துணை முதல்வர் ஆரியநாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்த நடைபயிற்சியின் போது வேளாங்கண்ணி பேரூராட்சி தூய்மை பணியாளர்களை சந்தித்த துணை முதல்வர், அவர்களிடம் நலமுடன் இருக்கிறீர்களா என நலம் விசாரித்தார். நடை பயிற்சியின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் உடனிருந்தார்.

6 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் சேரலாம் தமிழகத்தில் முதன் முறையாக இலவச பாய்மர படகு பயிற்சி: ஒரு ஆண்டு பயிற்சி முடித்தால் கடற்படை, அரசு பணி
நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தனியார் நிறுவனங்கள் பாய்மர பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த இந்த பாய்மர பயிற்சி மையத்தை இலவசமாக தொடங்க ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் தமிழக அரசிடம் பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அதிகமுள்ள நாகப்பட்டினம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. தமிழகத்தில் முதன்முறையாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாய்மர படகு பயிற்சி மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 மாணவர்களுக்கான முதற்கட்ட பயிற்சியையும் அவர் கொடியசைத்து தொடங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த பாய்மர படகு பயிற்சியில் இணைய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசம் என்றும், மீனவர்கள் மட்டுமின்றி ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு வருட பயிற்சியான பாய்மர படகை இயக்கும் பயிற்சியை முடித்தால் தமிழக அரசுத்துறை மட்டுமின்றி, இந்திய கப்பல் படை, கடலோர காவல் குழுமம் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்பு பெற முடியும். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் பயிற்சி பெற, ரூ.3 லட்சம் மதிப்பில் 4 பாய்மர படகு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

* ‘மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் தமிழகம்’
இசை முரசு நாகூர் இ.எம். ஹனீபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகூர் சில்லடி தர்காவில் ரூ.1.98 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன்பின்னர் ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக கலையரங்கத்தில் நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா நடந்தது. விழா மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு நாகூர் ஹனீபா குடும்பத்தை சேர்ந்தவர்கள் கவுரவித்தார்.

அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிற்கே முன் மாதிரியான மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் விளங்குகிறது. இங்கு தான் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் கோயில் ஆகியவை உள்ளது. சாதி மதம் பார்க்காத மண் என்றால் அது நாகப்பட்டினம் மண். வரும் 24ம் தேதி சென்னையில் நடைபெறும் இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். கலைஞர் மற்றும் நாகூர் ஹனீபா இருவருமே திமுகவின் கொள்கை குரல்கள். இந்தி திணிப்பை எதிர்த்து கலைஞர் திருவாரூரிலும், ஹனீபா நாகூரிலும் இந்தி திணிப்பு பேராட்டத்தை நடத்தினர். நாகூர் ஹனீபா, கலைஞரை போல் தமிழகத்தை மத நல்லிணக்க மாநிலமாக நாம் வைத்திருக்க வேண்டும். மத நல்லிணக்க அரணாக நமது முதல்வர் உள்ளார். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக தமிழகம் திகழ்கிறது. அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளது. அதே போல் இஸ்லாமியர்கள் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : BJP alliance ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Nagapattinam ,BJP ,DMK Union ,Urban ,
× RELATED மூலதன செலவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும்: அன்புமணி அறிக்கை