திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை தீப மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. திருவண்ணாமலை தீப மலையில் கடந்தாண்டு இறுதியில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. இது தொடர்பாக ஆய்வு செய்த வல்லுநர் குழு, மலைப்பகுதி குடியிருக்க தகுதி இல்லாத இடம் என அரசுக்கு பரிந்துரைத்தது. மேலும், மலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி இல்லாத வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுபடி, திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆர்டிஓ ராஜ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தீப மலையில் வீடுகள் கட்டிக் கொண்டிருப்பவர்கள், தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஆர்டிஓ ராஜ்குமார் விளக்கினார். அப்போது, மலைஅடிவாரத்தில் குடியிருப்போர் அனைவருமே தாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் குடியிருந்து வருவதாலும், தங்களுடைய வாழ்வாதாரம் அனைத்தும் திருவண்ணாமலை நகரப்பகுதியினை சார்ந்துள்ளதாலும் தங்களை தற்போது குடியிருக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். மேலும், குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குமாறு வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
The post ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை திருவண்ணாமலை தீப மலையில் appeared first on Dinakaran.
