செய்யாறு, டிச.18: செய்யாறு அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பி `அப்பா என்னை மன்னித்துவிடு’ எனக்கூறிவிட்டு தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த முருகத்தான்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு(78), விவசாயி. இவருக்கு மாலதி, மகேஸ்வரி என்ற 2 மகள்களும், பாலசெந்தில்(44) என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகனுடன் மண்ணு வசித்து வந்தார். பாலசெந்தில் அதே கிராமத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், தத்தாத்ரேயர்(8), கோவர்தனன்(5) என்ற 2மகன்களும் உள்ளனர். மண்ணுவுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் பூர்வீக சொத்தாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இருப்பினும் அவருக்கு வயதாகிவிட்டதால், அந்த 3 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி பாலசெந்தில் கடந்த சில மாதங்களாக கேட்டு வந்துள்ளார். இருப்பினும் சொத்துக்களை எழுதி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மண்ணு வீட்டில் படுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலசெந்தில் அருகில் இருந்த தலையணையை எடுத்து தந்தை எனக்கூட பாராமல் மண்ணுவின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சு திணறி மண்ணு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அப்போது அவ்வழியாக வந்த மண்ணுவின் தம்பி ராமதாஸ், பாலசெந்தில் தந்தையை தலையணையால் அழுத்தி கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ராமதாஸ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலசெந்திலை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: தந்தைக்கு வயதாகி விட்டது. இளகிய மனம் உடைய எனது தந்தையை ஏமாற்றி உறவினர்கள் யாராவது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொள்வார்களோ என்ற அச்சத்தில் இருந்தேன். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எனது தந்தையை எழுப்பி, ‘என்னை மன்னித்துவிடு, நீ இறந்தால்தான் உனது பெயரில் உள்ள சொத்து எனக்கு கிடைக்கும், உன்னை கொன்றுவிடுகிறேன்’ எனக்கூறினேன். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, ‘என்னை எதுவும் செய்யாதே, இதெல்லாம் தப்பு’ எனக்கூறி கதறினார். ஆனால் நான் அருகில் இருந்த தலையணையை எடுத்து, அவரது முகத்தில் வைத்து அழுத்தினேன். சிறிதுநேரத்தில் மூச்சு திணறி தந்தை இறந்தார். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தந்தையை, மகனே தலையணையால் அழுத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
