×

நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியாவும், ராகுலும் ரூ.142 கோடி பெற்றனர்: அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 1937ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது. இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை மட்டும் செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

மீதமுள்ள ரூ.89.50 கோடியை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக ஈடி குற்றம் சாட்டி உள்ளது. இந்த வழக்கில் முதல்கட்ட குற்றப் பத்திரிகையை கடந்த மாதம் 9ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாம் பிட்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 12ஆம் தேதி வழக்கில் தொடர்புடைய ரூ.661 கோடி மதிப்பிலான சொத்துகள், ரூ.90 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன் அமலாக்கத் துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு,’நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக ரூ.142 கோடி பெற்றுள்ளனர். எனவே, காந்தி குடும்பத்தினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்கள் மீது பணமோசடி தொடர்பான வழக்கில் போதுமான ஆதாரம் உள்ளது’ என தெரிவித்தார்.

The post நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியாவும், ராகுலும் ரூ.142 கோடி பெற்றனர்: அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : National Herald ,Sonia ,Rahul ,Enforcement Directorate ,New Delhi ,Associated Journals Limited ,AJL ,Jawaharlal Nehru ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்