×

பல்லாவரம் அருகே அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்: துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பால் பரபரப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய்மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றில் சுமார் 600 வீடுகள் உள்ளன. இப்பகுதிகள் அனைத்தும் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் என கூறப்படுகிறது. இங்கு ஏராளமானோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதில், முதல்கட்டமாக 81 குடும்பத்தினரை அகற்றி அவர்களுக்கு சென்னை பெரும்பாக்கம், கூடு வாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் மற்றும் கிஷ்கிந்தா செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீதமுள்ள ஆக்கிரமிப்பை மீட்க கடந்த 12ம்தேதி வருவாய் துறை அதிகாரிகள் தயாராகினர். இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். இந்தநிலையில் இன்று காலை மீண்டும் செங்கல்பட்டு கலெக்டர் அருண் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பை அகற்ற தயார் நிலையில் வந்தனர்.

இதற்கு பொதுமக்களில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால், முன்னதாகவே துப்பாக்கி ஏந்திய போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, அதிகாரிகள் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், 20 குடும்பத்தினர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, அரசு ஒதுக்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 10 வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.

மீதமுள்ள வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

The post பல்லாவரம் அருகே அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்: துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Adyar river ,Pallavaram ,Anakaputhur ,Thaimookambigai Nagar ,Kayide Millat Nagar ,Shanthi Nagar ,MGR Nagar 3rd Street ,Adyar river… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...