×

தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ் திரையுலக வரலாற்றில் ஏவிஎம் நிறுவனத்தை தவிர்க்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம்.சரவணன், கடந்த டிசம்பர் 4ம் தேதி காலமானார். இந்நிலையில், ஏவிஎம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன் மற்றும் எம்.எஸ்.குகன், எம்.பாலசுப்ரமணியன், அபர்ணா குகன், இந்து என்.ராம், நல்லி குப்புசாமி செட்டியார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏவிஎம்.சரவணனின் படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அவர் பேசியதாவது:

வரலாற்றில் தமிழ் திரையுலகை பற்றி குறிப்பிட்டால், அதில் ஏவிஎம் நிறுவனத்தை தவிர்க்க முடியாது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்கு பிறகு அவரது பொறுப்பை தனது தோளில் சுமந்துகொண்டவர், ஏவிஎம்.சரவணன். பள்ளியில் படிக்கும்போது, ‘பராசக்தி’ படத்தில் கலைஞர் எழுதிய வசனத்தை பேசி பரிசு வாங்கியவர், ஏவிஎம்.சரவணன். 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஏ.வி.மெய்யப்ப செட்டியார் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் அண்ணா, கலைஞர் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ஏவிஎம்.சரவணனை, கலைஞரிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். ‘ஹலோ மெட்ராஸ்’ என்ற மாத இதழை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்தார். அதன் முதல் இதழை கலைஞர் தொடங்கி வைத்தார். 1975ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடந்தது.

அதை சுமுகமாக பேசி முடித்து வைத்தவர், கலைஞர். ஏவிஎம் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலைஞர் கலந்துகொண்டு உரையாற்றியது மட்டுமின்றி, 190 கேடயங்களை நின்றுகொண்டே தனது கரங்களால் வழங்கி இருக்கிறார். பிலிம் சேம்பரில் உள்ள ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சிலை, கலைஞர் திறந்து வைத்ததுதான்.

கலைஞருக்கும், ஏவிஎம் நிறுவனத்துக்கும், அதன் குடும்பத்துக்கும் எந்தளவு தொடர்பு இருந்தது என்பதற்கு இவை அனைத்தும் உதாரணம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நானும், ஏவிஎம்.சரவணனும் சந்தித்து பேசிக்கொள்வோம். அப்போது, சென்னையை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்பதில் அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

நான் சென்னை மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களை கட்டினேன். அதன் திறப்பு விழாவுக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுக்காமல் இருந்தாலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு அங்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருப்பார். ஒருமுறை நானும், அவரும் விமானத்தில் செல்லும்போது, ‘திருட்டு விசிடி அதிகமாகிவிட்டது, அதை ஒழிக்க முடியாது’ என்று சொன்னார். ஏவி.மெய்யப்பன் தபால் தலையை 2006ல் கலைஞர்தான் வெளியிட்டார்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பிறகு கமல்ஹாசன் பேசுகையில், ‘எனக்கும், ஏவிஎம்.சரவணனுக்கும் 65 ஆண்டு கால நட்பு இருந்தது. அவர் ஒரு சகலகலா வல்லவர். என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார். என்னை அவர் பிள்ளையாகவே நினைத்து பாவித்தார். இந்த ஏவிஎம் பள்ளி அப்போதே இருந்திருந்தால், நான் பள்ளிக்கு சென்று படித்திருப்பேன் என்று தோன்றுகிறது’ என்றார்.

* ஓட்டுக்காக வரவில்லை… எல்லாம் அன்புதான்! முதல்வர் மு.க.ஸ்டாலினைபுகழ்ந்த ரஜினிகாந்த்

மறைந்த ஏவிஎம்.சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றில் தூய்மை என்றால் அதுதான் ஏவிஎம் சரவணன். 1980ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் பட தயாரிப்பில் இருந்து விலகி 8 வருடங்கள் ஆகியிருந்தது. மீண்டும் ஒரு படம் தயாரிக்கலாம் என்ற நிலையில், நான் நடித்த ‘முரட்டுக்காளை’ படம் முடிவானது. ஏவிஎம் புரொடக்‌ஷனில் நான் 11 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் 9 படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருக்கிறார்.

ஒவ்வொரு படத்துக்கும் கதையை நாம் கேட்க வேண்டாம். ஒவ்வொரு கதையிலும் யார் நடிக்க வேண்டும், ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள், அதை வெற்றிப் படமாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து இசை மற்றும் ஒளிப்பதிவு என்று அனைத்து துறைகளிலும் ஏவிஎம் ஈடுபாடு இருக்கும். அதுதான் ஏவிஎம்.சரவணன். நான் ‘எஜமான்’ படத்தில் நடித்தேன். அதற்கு முன்பு நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ போல ஒரு சென்டிமெண்ட் படத்தை கொடுக்க வேண்டும் என்று சரவணன் கூறியிருந்தார்.

அப்போது அவரிடம் ஆர்.வி.உதயகுமார் பெயரை சொல்லி, நல்ல கதை வைத்திருக்கிறார் என்று சொன்னேன். கேட்டால் கதையை கொடுப்பாரா என்று சரவணன் கேட்க, இல்லை. அவரே படம் இயக்குவார் என்று நான் சொன்னேன். உடனே, நமக்கு எஸ்.பி.முத்துராமன் இத்தனை படம் பண்ணியிருக்கிறார். அவர் ஆக்ட்டிவாக இருக்கும்போது வேறொருவரை வைத்து படம் பண்ண முடியாது என்று சரவணன் சொன்னார்.

ஒருநாள் நான் ஷூட்டிங்கில் இல்லை என்று கேள்விப்பட்டதும் எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்து, ஆர்.வி.உதயகுமாருடன் அந்த படம் பண்ணும்படி என் முன்னால் ஏவிஎம்.சரவணனிடம் சொன்னார். அவருக்கு சம்மதம் இல்லை என்றாலும், அப்படி என்றால் நான் உங்களுக்கு ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு ரூம் போட்டு தருகிறேன். நீங்கள் தினமும் அங்கு வரவேண்டும் என்று ஏவிஎம் சரவணன் சொன்னார். அதுதான் அவர்களின் நட்புக்கு இலக்கணம்.

ஏவிஎம்.சரவணன் தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் இருக்கும் எனது ஸ்ரீராகவேந்திரா மண்டபத்தை அவர்தான் உருவாக்கி கொடுத்தார். போயஸ் கார்டனில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை எவ்வளவு விலை என்றாலும் வாங்கும்படி சொல்லி அறிவுரை வழங்கினார். ‘சிவாஜி’ படம் வந்தபோது, வயது ஆக ஆக ஆக்ட்டிவாக இருக்க வேண்டும், பிசியாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்கள் என்று சொன்னார். அதை இப்போது நான் பின்பற்றி வருகிறேன்.

‘சிவாஜி’ படம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம். அதன் வெற்றிவிழாவில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் பங்கேற்றது சரவணனுக்காக மட்டும்தான். அதுபோல் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பணிச்சூழலுக்கு இடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் பதவியில் ஒவ்வொரு நாளும் விலை மதிக்க முடியாதவை. தேர்தல் நேரத்தில் அவர் இங்கு வந்திருப்பதால் 100 ஓட்டு அதிகமாக கிடைக்க போவதில்லை. எனினும் இங்கு வந்திருப்பதற்கு காரணம், ஏவிஎம்.சரவணன் மீது அவர் வைத்திருக்கும் அன்புதான்.

Tags : AVM ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,AVM Productions ,AVM Saravanan ,Higher Secondary School ,Virugambakkam, Chennai ,Minister ,M.A. Subramanian ,
× RELATED சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!