×

இந்தி மொழி போருக்கு எதிரான படையின் தளகர்த்தர்களில் ஒருவர் எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: இந்தி மொழி போருக்கு எதிரான படையின் தளகர்த்தர்களில் ஒருவர் என எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் – கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.

கலைஞரின் பாசத்தைப் பெற்ற ‘எல்.ஜி.’, 1989-ல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன். அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து பெருமையோடு சொல்வார்.

திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : மொழிப்போர் தளபதி என்றும், எல்.ஜி. என்றும் நம்மால் அன்புடன் அழைக்கப்பட்ட திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எல்.கணேசன் மரணம் அடைந்தார் என்ற செய்தியை சமத்துவ நடைபயணத்தின் போது கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

தன்னிகரற்ற அவரது பொதுப்பணிக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, அவரது மறைவால் துயரம் அடைந்துள்ள அவரது துணைவியார் கமலா உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், தோழர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: அண்ணா, கலைஞருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் திமுகவின் தொண்டர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tags : Chief Minister ,L. Ganesan ,Chennai ,M.K. Stalin ,anti-Hindi language ,
× RELATED தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு...