×

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்திருக்கிற தாக்குதல் ஒரு சட்ட விரோத, அடாவடி தாக்குதல் மட்டுமல்ல, அந்த நாட்டின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை ஆகும்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது இணையர் சீலியா ஃப்ளோரஸ் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். அமெரிக்காவின் கார்ப்பரேட் எண்ணெய் கம்பெனிகளின் கொள்ளையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகிற அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும். அமெரிக்கா உடனடியாக போரை நிறுத்தி மீண்டும் வெனிசுலா இறையாண்மையுடன் செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும். மோடி அரசு வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான்: உலக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்கா ராணுவம் அனைத்து சர்வதேச விதிகளையும் மீறி தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் அதிபர் நிகோலஸ் மதுரோவை நாடு கடத்தியுள்ளது.

வேறு ஒரு நாட்டின் இறையாண்மையை குழி தோண்டி புதைக்கும் அமெரிக்காவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவே கையாளும் என அறிவித்திருப்பது ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தின் உச்சம். இந்நடவடிக்கைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

Tags : US ,VENEZUELA ,Chennai ,Secretary of State ,B. SANMUGUAM ,UNITED STATES ,
× RELATED சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!