×

‘போரை நிறுத்த உதவினேன்’ 6வது முறையாக டிரம்ப் தம்பட்டம்: அடிபணிந்தது பாகிஸ்தான்

தோஹா: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நீண்ட பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இந்நிலையில் கத்தாரின் தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானப்படை தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் டிரம்ப் நேற்று பேசுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நானே நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் அப்பிரச்னையை தீர்க்க நான் நிச்சயமாக உதவினேன். போரில் சண்டை போடுவதற்கு பதிலாக வர்த்தகம் செய்வோம் என்றேன். பாகிஸ்தான் அதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

இந்தியாவும் மகிழ்ச்சி அடைந்ததாக கருதுகிறேன். அதற்கான பாதையில் அவர்கள் தொடர்கிறார்கள். இரு நாடுகளும் 1000 ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்கள். எவ்வளவு ஆண்டு என்பது சரியாக எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு தீர்வு காணும் வழியை நாங்கள் அறிவோம்’’ என்றார். இதற்கிடையே, அமெரிக்காவுடன் பூஜ்ஜிய வரி விதிப்பின் கீழ் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பாகிஸ்தான் சம்மதித்திருப்பதாக நேற்று தகவல் வெளியாகின. இதன் மூலம் போரை நிறுத்த உதவியதற்காக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அடிபணிந்திருப்பது உறுதியாகி உள்ளது.

* பாக். உடன் பேச்சு இருதரப்பிலானது
டெல்லியில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை பொறுத்த வரை எங்கள் உறவு, அவர்களுடனான பேச்சுவார்த்தை கட்டாயம் இருதரப்பு சார்ந்ததாகவே இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது பல ஆண்டாக தேசிய ஒருமித்த கருத்து. பாகிஸ்தானிடம் தீவிரவாதிகளின் பட்டியல் உள்ளது, அவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். தீவிரவாதம் குறித்தும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பித் தருவது பற்றியும் பாகிஸ்தானுடன் பேச தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

The post ‘போரை நிறுத்த உதவினேன்’ 6வது முறையாக டிரம்ப் தம்பட்டம்: அடிபணிந்தது பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Trump ,Pakistan ,Doha ,US ,President ,India ,Al-Udeid Air Base ,Doha, Qatar ,
× RELATED 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில்...