×

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கின் குற்றவாளி ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு: சிபிசிஐடி போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை

சென்னை: சென்னை அண்ணா பல்லைக்கழக மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரன் மீது, இளம் பெண் ஒருவர் அளித்த மற்றொரு பாலியல் புகாரில் பேரில் சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை ஞானசேகரன் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஞானசேகரனை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலலான தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஞானசேகரகன் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய அறிவியல் பூர்வமான நடவடிக்கையில் ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என தெரியவந்தது.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகா பிரியா, ஐமன் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய ‘சிறப்பு புலனாய்வு குழு’ அமைத்து உத்தரவிட்டது. அந்த சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையிலும் சென்னை காவல்துறை நடத்திய விசாரணை சரியானது என்றும், குற்றவாளி ஞானசேகரன் மட்டும் தான் என்றும் உறுதி செய்து நீதிமன்றத்தில் தனது அறிக்கையை அளித்தது. இருந்தாலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் சென்னை போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை மற்றும் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை பெற்று தனியாக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஞானசேகரன் மீது அபிராமபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பின்தொடர்ந்து செல்போன் பறித்து பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடியில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளம் பெண்ணுக்கு ஞானசேகரன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதனை தொடர்ந்து ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் புதிய வழக்கில் புழல் சிறையில் உள்ள ஞானசேகரனை பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் மாலை சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் ஞானசேகரனை விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய பாலியல் வழக்கில், இளம் பெண் அளித்த ஆதாரங்களை ஞானசேகரனிடம் நேரடியாக வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த புதிய பாலியல் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் செல்போன் பறிப்பின் போது இளம் பெண்ணை எந்த வகையில் மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தார் என்பது குறித்த தகவல் தெரியவரும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கின் குற்றவாளி ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு: சிபிசிஐடி போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gnanasekaran ,Anna University ,CBCID ,Chennai ,Chennai Anna University ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு,...