புதுடெல்லி: பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேற்று, டெல்லி அணி, 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. ஐபிஎல் 46வது லீக் போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் பொரெல், ஃபாப் டூப்ளெஸிஸ் களமிறங்கினர். ஹசல்வுட் வீசிய 4வது ஓவரில் பொரெல் (28 ரன்) அவுட்டானார். அடுத்து வந்த கருண் நாயரும் 4 ரன்னில், யாஷ் தயாள் பந்தில் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் தந்து வீழ்ந்தார். அதையடுத்து, டூப்ளெஸிசுடன் கே.எல்.ராகுல் இணை சேர்ந்தார். இவர்கள் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்த நிலையில், டூப்ளெஸிஸ் (22 ரன்), க்ருணால் பாண்ட்யா பந்தில், விராட் கோஹ்லியிடம் கேட்ச் தந்து வீழ்ந்தார்.
அதன் பின் வந்த கேப்டன் அக்சர் படேலும், அதிக நேரம் நீடிக்காமல், 15 ரன்னில், ஹசல்வுட் பந்தில் கிளீன் போல்டானார். 16 ஓவர் முடிவில், டெல்லி 4 விக்கெட் இழந்து 117 ரன் மட்டுமே எடுத்து தடுமாறியது. இந்நிலையில், 17வது ஓவரில், புவனேஷ்வர் குமார் பந்தில், பெத்தேலிடம் கேட்ச் தந்து ராகுல் (41 ரன்) வெளியேறினார். அதே ஓவரில், அசுதோஷ் சர்மா (2 ரன்), கிளீன் போல்டாகி 6வது விக்கெட்டாக நடையைக் கட்டினார். 7வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த விப்ரஜ் நிகாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 18வது ஓவரில் அடித்து ஆடி 17 ரன் குவித்ததால், அணியின் ஸ்கோர் கவுரவ நிலைக்கு உயர்ந்தது.
யாஷ் தயாள் வீசிய 19வது ஓவரிலும் அதிரடி காட்டிய அவர்கள், 19 ரன்களை குவித்தனர். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் விப்ரஜ் (12 ரன்) ரன் அவுட்டானார். அதே ஓவரில், ஸ்டப்ஸ் (18 பந்து, 34 ரன்), ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில், டெல்லி, 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. பெங்களூரு தரப்பில், புவனேஷ்வர் குமார் 3, ஹசல்வுட் 2, யாஷ் தயாள், க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
The post பெங்களூரு அணிக்கு எதிராக டெல்லி அணி 162 ரன் appeared first on Dinakaran.
