* தடகளத்தில் தங்கம் வென்ற ஜான்சன் ஓய்வு
புதுடெல்லி: கடந்த 2018ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கேரளாவை சேர்ந்த இந்திய தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் (34), நேற்று ஓய்வு பெற்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் தூரத்தை 44.72 விநாடிகளில் கடந்த ஜான்சன் தேசிய சாதனையையும் படைத்தார். அந்த போட்டிகளில், 800 மீட்டர் பிரிவில் ஜான்சன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். ஓய்வு குறித்து, ஜான்சன் நேற்று, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘கொல்கத்தா நகரில் இருந்து சிறுவனாக எனது ஓட்டப் பயணத்தை துவக்கிய நான், 2023ல், ஹாங்சுவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை பங்கேற்றேன். இதற்கு வாய்ப்பளித்த தடகளத்துக்கு நன்றி’ என கூறியுள்ளார்.
* டெண்டுல்கர் மகனுக்கு மார்ச்சில் திருமணம்
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காய்யின் பேத்தி சானியா சண்டோக்கை, வரும் மார்ச் முதல் வாரத்தில் திருமணம் செய்ய உள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காக சமீபத்தில் நடந்த ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன், கடந்த 2022ல் ரஞ்சி கோப்பை போட்டியில் கோவா அணிக்காக முதன் முதலில் ஆடி சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
* நியூசி அணிக்கு ஜேகப் கேப்டன்
வெலிங்டன்: இந்தியா, இலங்கை நாடுகளில் வரும் பிப்ரவரி 7ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜேகப் டஃபி (31) நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் அவர் 81 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி நிகழ்த்திய 40 ஆண்டு கால சாதனையை (79 விக்கெட்) ஜேகப் டஃபி தகர்த்துள்ளார். டி20 பந்து வீச்சு தரவரிசையில் அவர் 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
