சிட்னி: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று, ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில், ஆஸி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி இந்த அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி துவங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 384 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 3ம் நாளில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர்ந்தது.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மைக்கேல் நெஸர் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன் குவித்து ஆட்டமிழந்தார். பின் வந்த வீரர்களும் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்ததால், நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 124 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 205 பந்துகளில் 129, பியு வெப்ஸ்டர் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3, பென் ஸ்டோக்ஸ் 2, ஜேகப் பெத்தேல், ஜோஷ் டங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று 4ம் நாளில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர உள்ளது.
* ஆஷஸ் தொடரில் ஸ்மித் சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 129 ரன் குவித்த ஆஸி அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஆஷஸ் தொடரில் 2வது அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் தனது 37வது டெஸ்ட் சதத்தை விளாசிய ஸ்மித், ஆஷஸ் தொடரில் இதுவரை 73 இன்னிங்ஸ்களில் 3663 ரன்கள் விளாசி உள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸி ஜாம்பவான் மறைந்த டான் பிராட்மேன் 63 இன்னிங்ஸ்களில் 5028 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜேக் ஹாப்ஸ் 71 இன்னிங்ஸ்களில் 3636 ரன்கள் குவித்து 3ம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் 3222 ரன்னுடன் 4, அதே அணியின் ஸ்டீவ் வாவ் 3173 ரன்னுடன் 5ம் இடத்தில் உள்ளனர்.
