ஆக்லாந்து: ஏஎஸ்பி கிளாசிக் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் மட்டுமே பங்கு பெறும் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் – செக் வீராங்கனை சாரா பெஜ்லெக் மோதினர். முதல் செட்டில் இருவரும் சமபலத்துடன் ஆக்ரோஷமாக மோதினர். டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் இவா கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை வாங் ஜிங்யு – மெக்சிகோ வீராங்கனை ரெனாடா ஜுராஸுவா மோதினர். துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய வாங், 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடி காலிறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு போட்டியில் பெல்ஜியத்தின் சோபியா கோஸ்டாலஸ் – ஸ்பெயின் வீராங்கனை கெய்ட்லின் குவெடோ களம் கண்டனர். இப்போட்டியில் அற்புதமாக ஆடிய சோபியா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
