சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4ம் நாளில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழந்து 302 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் ஆஸி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி இந்த அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி துவங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 384 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் குவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று 4ம் நாளில் ஆஸி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 138 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 5 ரன்னிலும், ஸ்காட் போலண்ட் ரன் எடுக்காமலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதனால், 567 ரன்னில் ஆஸியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 1 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். சிறிது நேரத்தில் பென் டக்கெட் 42 ரன்னில் அவுட்டானார். பின் வந்தோரில் ஜேகப் பெத்தேல் மட்டும் நங்கூரமாய் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து வந்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இங்கி வீரர்களில் ஹேரி புரூக் 42, ஜேமி ஸ்மித் 26 ரன் எடுத்தனர். ஜேகப் பெத்தெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 232 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசி இங்கிலாந்தை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 302 எடுத்திருந்தது. ஆஸி தரப்பில் பியு வெப்ஸ்டர் 3, ஸ்காட் போலண்ட் 2, மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை இங்கிலாந்து வீரர்கள் தொடர உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ஜேகப் பெத்தேலின் ஆட்டத்தை பொறுத்தே போட்டி டிரா ஆகுமா என்பது தெரியும்.
